Homeதலையங்கம்நிர்மலா சீதாராமனின் அதிரடி அரசியல்!

நிர்மலா சீதாராமனின் அதிரடி அரசியல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது காமரெட்டி, பான்ஸ்வாடாவுக்கு அவர் சென்றார்.

அப்போது அங்குள்ள ரேஷன் கடை ஒன்றில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா, பொருட்களின் தரம் எப்படி உள்ளது என்று கேட்பதற்கு முன், பிரதமர் மோடியின் புகைப்படம் எங்கே? ஏன் வைக்கவில்லை? என்று மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம் பொங்கியுள்ளார். மேலும் ‘ரேஷன் அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு? என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் இவ்வாறு நடந்துகொண்ட விதம், தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

பொது இடத்தில் மாவட்ட ஆட்சியரை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டதாகவும் ரேஷன் கடையில் பிரதமர் மோடி படத்தை வைக்க அவர் மேற்கொண்ட அணுகுமுறை தவறானது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ், நிர்மலா சீதாராமன் பேச்சு நகைச்சுவையானது. தேசிய உணவு விதிகளின் கீழ் 50 முதல் 55% வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு ரேஷன் அரிசி வழங்குகிறது.

மீதமுள்ள 45% பேருக்கு தெலுங்கானா அரசே ரேஷன் அரிசி வழங்குகிறது. இதற்காக முதலமைச்சர் படத்தை வைக்கிறோமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,ஜிஎஸ்டி வரி செலுத்தும் ரசீதுகளிலும் பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்என சூடாக கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது.

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாதது குறித்து புகார் தெரிவித்து, பொது விநியோகத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கலாம் என்று கடுமையாக, ஆனால் மிகச் சரியாக விமர்சித்துள்ளார். ரேஷன் கடைகள் நாடுமுழுவதும் இயங்கி வருகின்றன.

அந்தக்கடைகளில் பிரதமர் மோடி படத்தை வைக்க வேண்டும் என ஒன்றிய அரசு ஏதேனும் உத்தரவிட்டு இருக்கிறதா? மாநில அரசுகளுக்கு அறிவுரை தான் கூறி இருக்கிறதா? இல்லையே.

அப்படி இருக்கும்போது, ஏதோ ஒரு ரேஷன் கடைக்குப் போய் மோடி படத்தை ஏன் வைக்கவில்லை என்று கேட்டு மாவட்ட ஆட்சியரை வறுத்தெடுத்தது எப்படி நியாயம் ஆகும்? ஆட்சியரால் என்ன செய்ய முடியும்? மாநில அரசை மீறி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் மோடி படத்தை வைக்க ஆட்சியரால் உத்தரவிட முடியுமா? நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒன்றிய நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஆட்சியரிடம் கேட்ட கேள்வியை தெலுங்கானா மாநில முதல்வரிடம் கேட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.

அல்லது அந்த மாநில பொது விநியோகத்துறை அமைச்சரையாவது தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் இருப்பது போலவும் அவர் ஆய்வு செய்த ரேஷன் கடையில் மட்டும் பிரதமர் படம் இல்லாதது போலவும் நிர்மலா சீதாராமன் நடந்து கொண்டிருக்கிறார்.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு போடும் நிர்மலா சீதாராமன்,நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் படத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும்` என உத்தரவிட வேண்டியது தானே. இது போன்றவற்றுக்கெல்லாம் ஒரு அணுகுமுறை இருக்கிறது என்பது அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

தெலுங்கானாவில் நிர்மலா சீதாராமன் புதிய கோணத்தில் அதிரடி அரசியல் செய்யத் துணிந்தாரோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை!

படிக்க வேண்டும்

spot_img