தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றரை சதவீமாகவும் குறைக்க வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கங்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் போது, டிஜிட்டல் பணபரிவர்த்தனை கட்டாயம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது நகை தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, சிறுக சிறுக பணம் சேர்த்து தங்கம் வாங்கும் எளிய மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதுவும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் பயன்படுத்தாத பழைய தங்கத்தை, பொதுமக்கள் விற்க வரும் போது அதன் மீது 20 சதவீதம் வரி விதிப்பதை தற்காலிகமாக ரத்து செய்யவும் கோரப்பட்டுள்ளது. இதை அறிவித்தால், இறக்குமதி தங்கத்தின் அளவு குறைந்து, அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் எனவும் தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக இருந்தது. அதை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5 சதவீதமாக உயர்த்தி அதிர்ச்சி தந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதே நிதி அமைச்சர் வருகிற பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார்.
கடந்த இரு ஆண்டுகளாக தங்க நகை சிறு வியாபாரிகள், பொற்கொல்லர்கள் பல்லாயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தான் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். நகைத் தொழிலை மீட்டெடுக்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கள் கோரிக்கைகளை ஏற்று சலுகைகளை அறிவிப்பார் என்ற திடமான நம்பிக்கையுடன் நகைத் தொழிலைச் சார்ந்தோர் காத்திருக்கின்றனர்.
இறக்குமதி வரியையும் ஜிஎஸ்டி வரியையும் குறைப்பதோடு, மேலும் சில சலுகைகளையும் அறிவித்து நகைத் தொழிலுக்கு புத்துயிர் கொடுப்பாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
இந்த ஆண்டாவது நிலைமை மாறுமா?



