ஜனநாயகத்தில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் நிரபராதிதான்.
அந்த நிலையில் தேச துரோக வழக்கு என்று போடுவது எப்படி நியாயமான ஒன்றாகும்? பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் தேவையற்ற ஏராளமான பழைய சட்டங்களை ரத்து செய்வதில் மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இது வரையில் 1500க்கும் மேற்பட்ட பழைய சட்டங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை போல தேச துரோக சட்டமும் தேவையற்ற ஒன்றாகும்.
நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான மற்ற பல சட்டங்கள் இருக்கிறது.
அப்படி இருக்க ஆங்கிலேயர் கொண்டு வந்த இந்த சட்டம் எதற்கு?
கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையற்ற ஒன்று என்று போராட்டம் நடத்திய உதயகுமார் அவர் மனைவி, மற்றும் வயதான மூதாட்டிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் மிக மிக வரவேற்கத்தக்கது.
மத்திய அரசாங்கமே சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி காட்டிய வழியை பின்பற்றி இந்த தேச துரோக சட்ட பிரிவை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் வழக்கு தொடர்ந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. வழக்கு தொடராதவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.