fbpx
Homeதலையங்கம்தளபதி மரணத்தை கொச்சைப்படுத்துவதா?

தளபதி மரணத்தை கொச்சைப்படுத்துவதா?

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என 13 பேரின் அகால மரணம் நாட்டையே உலுக்கி இருக்கிறது.

வெலிங்டனில் இருந்து, வீரமரணம் அடைந்தவர்களின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் எடுத்து வரப்பட்டபோது வழிநெடுகிலும் உள்ள ஊர்களில் குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

‘வீரவணக்கம், ஜெய்ஹிந்த்’ என அவர்கள் எழுப்பிய முழக்கமே பிபின் ராவத் மரணம் நாட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். நமது பரம எதிரியான பாகிஸ்தான் நாட்டு ராணுவம் கூட இரங்கல் தெரிவித்திருக்கிறது.

மரணம் அடைந்த நமது வீரர்களின் இறுதிச் சடங்குகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. அதற்குள் நமது முப்படைத் தலைமை தளபதியின் மரணத்தை கொச்சைப் படுத்தும் கருத்துக்களைப் பதிவிட்டு தேசவிரோதிகளாக தங்களை சிலர் அடையாளப்படுத்தும் கேவலமான செயல்களை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு பதிவைக் காண்போம். ‘நரகத்திற்கு செல்ல வேண்டியவன், முன்னரே தீக்கிரையாகி விட்டான்’ என மனிதநேயமே இல்லாத ஒரு பதிவு வெளியாகி இருக்கிறது.

இன்னும் பல மோசமான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றை படிக்கும் போது நெஞ்சம் குமுறுகிறது; கொந்தளிக்கிறது.
பிபின் ராவத் மரணத்தை கொண்டாடிய ராஜஸ்தான் இளைஞர் கைதாகி இருக்கிறார்.

இவரை போன்று தேசத்தை துண்டாட நினைப்பவர்களை கண்டுபிடித்து களை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. பெரும் துயரம் நிகழ்ந்து விட்டதே என நாட்டு மக்கள் வேதனையில் மூழ்கி இருக்கும் நிலையில் புண்படுத்தும் பதிவுகளை பதிவிடுவோருக்கு இந்த நாட்டில் வாழ என்ன தகுதி இருக்கிறது?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேசத்துக்கு எதிராக செயல்படும் புல்லுருவிகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இந்த இழிவானப் போக்கை இப்படியே விட்டு விட முடியாது.

தேசத்துரோக வழக்குகள் பாய வேண்டும். இல்லையெனில், வருங்காலத்திலும் இதேநிலை தொடருவது நிச்சயம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img