fbpx
Homeதலையங்கம்சமூக நீதிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

சமூக நீதிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

மருத்துவம், பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதாவது சமூகநீதியை உறுதிசெய்திருக்கிறது.

இந்த வெற்றி ஏதோ திடுதிப்பென கிடைத்து விடவில்லை. இந்த மகத்தான தீர்ப்பு, தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுகழகத்திற்கும் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவிற்கு இந்த சமூக நீதி வெற்றிக்குப் பின்னால் திமுகவின் தொடர் முயற்சி இருந்திருக்கிறது. அதற்குச் சான்றாக, 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல், ஒத்திவைப்பு தீர்மானம், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம், பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்… இப்படி அந்த முயற்சிப் பட்டியல் நீளுகிறது.

28.5.2020 அன்று,- அகில இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதன்படி, 11.6.2020 அன்று- சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. 19.6.2020 அன்று – மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்தது.

சட்டரீதியாகத் தொடர்ந்து தி.மு.க போராடிய நிலையில் தற்போது, மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இப்படியாக இடஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக, முயற்சி திருவினையாக்கும் என்று அய்யன் வள்ளுவனின் வாக்கு பலித்திருக்கிறது.

அதேபோல பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுதொடர்பாகத் தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கு அரசியல்சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது.

வரும் மார்ச் மாதம் நடைபெறும் விரிவான விசாரணையின்போது, 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை தி.மு.க முன்வைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை திமுக பெற்றுத் தந்துள்ளது. இது ஓர் வரலாற்று வெற்றியாக பதிவாகி இருக்கிறது.

இதன் காரணமாக தற்போது வடஇந்தியாவில் இருக்கும் ஓபிசி அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சங்கங்கள், பல்வேறு முற்போக்கு அரசியல் அமைப்புகள் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி வருகின்றன.

வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img