fbpx
Homeதலையங்கம்கொரோனா 3வது அலை… வைப்போம் முற்றுப்புள்ளி!

கொரோனா 3வது அலை… வைப்போம் முற்றுப்புள்ளி!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பு மூலம் கொரோனா 3ம் அலை, ஆழிப்பேரலையாக உருவெடுத்து இருக்கிறது. இதனால் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரதில் நாடு முழுவதும் 1.80 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நேற்று 12,895 பேராக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் சிறார்களுக்கு (15 முதல் 18 வயது வரை) தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 நாட்களில் 31 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

தடுப்பூசி போடுவதை இயக்கமாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி நேற்று வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் தமிழகத்தில் முன்னதாகவே கொரோனா தடுப்பூசி போடுவது ஓர் இயக்கமாக மாற்றப்பட்டு விட்டது.

இதற்கு நல்ல பலன் கிட்டியுள்ளது. வாரம்தோறும் மெகா முகாம்கள் மூலம் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதையும் இயக்கமாக… பேரியக்கமாக மாற்றி தமிழகம் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி வருவது வேதனை தரும் செய்தியாகும். அதே நேரத்தில் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உயிரிழப்பு இல்லை என்பதும் ஆறுதலான விஷயம்.

இந்த 3வது அலையை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர முயற்சிகள் மட்டும் போதாது. பொதுமக்களும் தங்கள் கடமையை செய்திட வேண்டும். அது என்ன கடமை? இதில் புதிருக்கு இடமில்லை; எல்லாம் தெரிந்தது தான்.

அரசின் கட்டுப்பாடுகளை உறுதியாகக் கடைபிடிப்பது தான் அந்த கடமை.
கூட்டமாக கூடாதீர்கள், இருவருக்கு இடையே இடைவெளி இருக்கட்டும், முக கவசம் அணியாமல் வெளியே வரவே வராதீர்கள், அடிக்கடி கைகளை கழுவ மறக்காதீர்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இவை தான் அந்தக் கட்டுப்பாடுகள்.

இவற்றை கடைபிடிப்பது சுலபம் தான். ஆனாலும் பொருளாதார அடிப்படையில் சிரமமும் இருக்கிறது. கொரோனாவை விரட்ட வேறு வழியில்லையே.
அரசுடன் இணைந்து மக்களும் செயல்பட்டால் 3வது அலை மட்டுமல்ல, எத்தனை அலை வந்தாலும் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

கடமையை நிறைவேற்றுவோம்!

படிக்க வேண்டும்

spot_img