Homeதலையங்கம்கூட்டாட்சி தத்துவமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

கூட்டாட்சி தத்துவமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

இந்தியாவில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் மாநில உரிமைகளை பறித்து, ஒன்றிய அரசு சொல்வதைத்தான் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பாஜக தவிர்த்த பிற கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஒன்றிய அரசு, மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்குப் பதிலாக ஒற்றை வரியாகச் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி தற்போது நடைமுறையில் உள்ளது.

இதையடுத்து, ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி கவுன்சில்தான் வரியை கூட்டுவது, குறைப்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதில், “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்க முடியாது. ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது.

அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பேரறிவாளன் விடுதலை வழக்கிலும் பல ஆண்டுகளாக மாநில உரிமைகளில் தலையிட்டு, அதன் உரிமைகளை குறைக்கும் வகையில்தான் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் செயல்பாடுகள் இருந்தன. உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதனை உறுதிப்படுத்துகிறது.

மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது.

அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகளின் மூலம், ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றமே கூட்டாட்சி தத்துவம் குறித்து பாடம் எடுத்துள்ளது. இந்தியா முழுமைக்குமான – கூட்டாட்சித் தத்துவத்துக்குக் மாபெரும் வெற்றி கிட்டி உள்ளது.

இனியாவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் எந்த விஷயத்திலும் ஒன்றிய அரசு ஈடுபடக் கூடாது; கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணி ஜனநாயகத்துக்கு வலு சேர்க்க வேண்டும்.

இந்தியாவில் ஜனநாயகம் ஆரோக்கியமாக தழைக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img