Homeதலையங்கம்எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி - திருகு வலி!

எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி – திருகு வலி!

எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் என்று பெருவாரியான உறுப்பினர்கள் தீவிர ஆதரவு அளித்து வருகிறார்கள்.

அதனால் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

பெருவாரியான நிர்வாகிகள் பலம் இருந்தாலும் கூட, தொண்டர்கள் என்பக்கம் இருக்கிறார்கள் என ஓபிஎஸ் கூறுகிறார். வருகிற ஜூலை 11ம் தேதி எடப்பாடி பொதுச்செயலாளர் ஆவதில் பெரிய சிக்கல் இருப்பதாகவே சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் ஒபிஎஸ் வசம் மிகப்பெரிய அஸ்திரங்கள் சில இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். அது என்னென்ன?
எடப்பாடி தரப்பு செய்த முதல் தவறு – 23 தீர்மானங்களை நிராகரித்தது. ஏனென்றால் தீர்மானங்களை படித்து காட்டிய பின்பே அதை நிராகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் அவசரப்பட்டு நிராகரித்ததால் அது சட்ட ரீதியாக தவறானதாக மாறிவிடுகிறது.

இரண்டாவதாக ஓபிஎஸ் தீர்மானங்களை முன் மொழிந்தார் என்பதால் அதை படித்துக்காட்டியதாக பொருள் கொள்வோம் என்றே வைத்துக்கொள்வோம். இந்த தீர்மானத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பதால் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் செப்டம்பர் வரை இதற்கு அவகாசம் உள்ளது. அதற்குள் எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழுவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றலாம். எனவே ஓபிஎஸ் இப்போதும் ஒருங்கிணைப்பாளர்தான். பதவி இன்னும் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது இப்போதும் ஓபிஎஸ் தான் பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும். அடுத்த பொதுக்குழு அறிவிப்பு அவை தலைவர் உசேன் மூலம் வெளியிடப்பட்டது சட்ட ரீதியாக செல்லாது.

பொதுக்குழுவை ஓபிஎஸ் கூட்ட வேண்டியது இல்லை. அவைத்தலைவர் கூட்டினால் போதும் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியே பார்த்தாலும் சட்ட விதிப்படி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து அவசியம்.

கடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். இதில் முதல் தீர்மானமே, கழகத்தின் அனைத்து தேர்தல்களுக்கும், அதாவது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட , ஒன்றிய, பொதுக்குழு தேர்தல் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல்களுக்கும் ஒப்புதல் வழங்குவது தொடர்பான தீர்மானம் ஆகும்.

இந்த தேர்தல் ஒப்புதல் தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் பதவி இழக்கிறார்கள். இதனால் அவர்கள் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கடிதமும் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

23 தீர்மானத்தை ரத்து செய்ததன் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தமாக பதவி இழக்கிறார்கள். இவர்கள் பதவி இழக்கவில்லை என்று வாதத்தை வைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்படி என்றால்.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் பதவி இழக்கவில்லை. அவர்களும் பதவியில் தொடர்வார்கள். எனவே ஒருங்கிணைப்பாளருக்கே பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் உள்ளது.

இப்படியெல்லாம் ஆராயும்போது இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவே தெரிகிறது. தலைவலி திருகுவலியாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் ஓபிஎஸ் தெம்பாக தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

பாஜக, ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் அதுவும் கூட எடப்பாடிக்கு எதிராகவே திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11ம் தேதி பொதுக்குழு தான் அதிமுகவைச் சுற்றி பெரும் கேள்விக்குறியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்தக் கேள்விக்குறி அப்படியே தொடருமா? ஆச்சர்யக் குறியாக மாறுமா? முற்றுப்புள்ளியாக மாறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img