ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நியாய மான கேள்விகளை கேட்டுள்ளது.
பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று பகிரங்கமாகவே உச்சநீதிமன்றம் கேட்டது மட்டுமல்லாமல், 30 ஆண்டுகளுக்குமேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நிலை இவற்றை யெல்லாம் மனிதநேயத்தோடு பார்க்கும்பொழுது, அவரை விடுதலை செய்வதற்கு ஏன் கால தாமதம்? இதில் விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால், நாங்களே முடிவெடுத்துக் கொள்வோம். முடிவெடுக்கும் பிரச்சினையில் ஒன்றிய அரசு ஏன் தலையிடுகிறது-? என்று உச்சநீதிமன்ற நீதிபதி பளிச் சென்று கேட்டிருக்கிறார்.
இதைவிட மிக ஆணித்தரமான கேள்விகளை, உச்ச நீதிமன்றம் இதுவரையில் எந்த வழக்கிலும் கேட்ட தில்லை. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஏன் அக்கறை காட்டவில்லை? என்று நீதிபதிகள் வினா எழுப்பி அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் ஆளுநர் ஏதாவது விளக்கம் கேட்டு, முடிவெடுக்கத் தாமதிக்கிறார் என்ற கருத்தையும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டு இருக்கிறார்கள்.
இதன்மூலமாக ஒன்றிய அரசு, ஆளுநர் இருவரு டைய நிலைப்பாடும் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இதற்குப் பிறகும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக கண் முன் நிற்கிறது.
உடனடியாக முடிவெடுக்காவிடில் உச்சநீதிமன்றமே இதற்குரிய தீர்வை, விரைவில்
அளிப்போம் என்று நீதிபதிகள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கோடான கோடி தமிழர்கள், நியாயவாதிகள் அனைவரும் இதனை வரவேற்கிறார்கள்.
விரைவில் நல்ல தீர்ப்பு வரட்டும்!