Homeதலையங்கம்ஆன்லைன் ரம்மிக்கு தடை: ஒப்புதல் தருவாரா ஆளுநர்?

ஆன்லைன் ரம்மிக்கு தடை: ஒப்புதல் தருவாரா ஆளுநர்?

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகி வருகிறது.

இதனால் இந்த விளையாட்டுக்கு தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து விடாது வலியுறுத்தி வந்தார்.

இதனையடுத்து, ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழு, ஆன்லைன் விளையாட்டுகள், திறன்கள், அதனால் ஏற்படும் தீமைகள், ஏற்படும் நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அந்த குழு, ஜூன் 27ஆம் தேதி அன்று தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுகளை தடை விதிப்பது குறித்து பொதுமக்களிடமும் தமிழ்நாடு அரசு கருத்து கேட்டது.

அதன்பின், பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தின் வரைவு கடந்த ஆக.29ஆம் தேதி அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், இந்த அவசர சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, நேற்று (செப். 26) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இந்த அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தற்போது, ஏற்கெனவே 21 மசோதாக்கள் ஆளுநரிடம் கிடப்பில் உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளிப்பாரா? என அரசியல் வட்டாரத்தில் கேள்வியெழுந்துள்ளது.

ஆனாலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஒரு சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு உயிர் கூட ஆன்லைன் ரம்மியால் போகக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

உயிர்கள் பலியாவதையும் குடும்பங்கள் உருக்குலைவதையும் ஆளுநரும் முதல்வரும் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் கடமையை செவ்வனே செய்து முடித்து ஆளுநர் ஒப்புதலுக்கு சட்டத்தை அனுப்பி விட்டார்.

இந்த சட்டத்திற்கு ஆளுநர் மிக விரைவாக ஒப்புதல் தருவார் என்றே தமிழக மக்கள் நம்புகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு விரைவாக ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதலைத் தரவேண்டும்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் அவர்களே, இது தான் தமிழக அரசின், தமிழர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு. சூதாட்டத்தை நல்லது என்று யாருமே சொல்லமாட்டார்கள்.
நல்லதே நடக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img