பிரதமர் மோடியின் முயற்சியால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலிலில், பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க-வின் டெல்லி ஊடகப் பிரிவின் நிர்வாகியான நவீன் ஜிண்டாலும், நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது, சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்தியாவிற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்லாமிய நாடுகளையும் கொந்தளிக்க வைத்துள்ளன. `இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம்‘ என்கிற ஹேஷ்டேக் அரபு நாடுகள் முழுவதும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது.
அரபு நாடுகளின் கண்டனத்தைக் கண்டு இந்திய அரசு அதிர்ச்சியடைந்தது. நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து பா.ஜ.க இடைநீக்கம் செய்திருக்கிறது. நவீன் ஜிண்டால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும், உள்நாட்டுப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், சர்வதேசப் பிரச்சினையாகவும் இது மாறியிருக்கிறது. இப்படியான சூழலில், இடைநீக்க நடவடிக்கையோ, கண்டன அறிக்கையோ போதுமானது அல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்தியத் தூதர்களை அழைத்து விளக்கம் கோரியுள்ளன.
ஓ.ஐ.சி எனப்படும் 57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட அமைப்பு, நபிகள் நாயகத்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியாவை விமர்சித்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ரீதியாக பா.ஜ.க நடவடிக்கை எடுத்துவிட்டது. கட்சி சார்பில் விளக்க அறிக்கையும் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, பிரச்சினை முடிந்தது என்று பா.ஜ.க-வும் ஒன்றிய அரசும் கருதுகிறது. ஆனால், வளைகுடா நாடுகளில் இந்தப் பிரச்சினையால் ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்கவில்லை.
இந்தப் பிரச்சினை அடங்க வேண்டுமென்றால், பா.ஜ.க-வின் தலைமையும், இந்திய அரசும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.
மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து வளைகுடா பிராந்தியத்துக்கு பலமுறை சென்றுவந்திருக்கிறார். அதன் மூலமாக அந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களாலும் நேசிக்கப்படுகிற நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
எந்த மதத்தினராக இருந்தாலும் பிற மதத்தினரையும் மதித்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகத்தான் இந்தியா காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. இனியும் அது தொடர வேண்டும்.
இதற்கு குந்தகம் ஏற்பட ஆளும் அரசும் மத அமைப்புகளும் இடம் கொடுத்து விடக்கூடாது. குறிப்பாக அரபு நாடுகளுடனான பொருளாதார உறவில் எந்தபாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது.
இந்தியாவின் இறையாண்மையைக் காப்போம்!



