தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தமிழகம் முன்னேறி இருக்கிறது. இதற்கு முழு முதற்காரணமாக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
இருந்தாலும் தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கும் பெரும் பங்குண்டு. அதற்காக அவர்கள் அத்தனை பேருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியதன் பயனாக இந்த சாதனையை தமிழக அரசு எட்டிப்பிடித்துள்ளது. ஒற்றைச்சாளர நடைமுறை, தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள், வரி சீர்திருத்தம், கட்டுமான அனுமதி உள்ளிட்ட 301 சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கி பட்டியல் தயாராகிறது.
இவற்றை செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு மதிப்பீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, மதிப்பீட்டு அறிக்கையைத் தான் ஒன்றிய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், மூன்றாம் இடத்தை தமிழ்நாடு பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல.
தமிழகத்தில் 94,975 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2.26 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 132 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டது, தொழில்கள் தொடங்குவதற்கான தொடர் முயற்சி, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைள், உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகள் என முதல்வர் மு.க.ஸ்டாலினின் இடையறாத முயற்சியின் பலனாக தமிழ்நாடு சாதனைப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
வரும் ஆண்டில் இந்தப் பட்டியலில் முதலிடம் தமிழ்நாட்டுக்கே கிடைக்கும் வகையில் தொழில் துறை தனது முன்னெடுப்பை விரைவுபடுத்தி வருகிறது. அந்தச் சாதனைக்குத் தேவையான அறிவுத்திறனை உருவாக்கத் தான் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நான் முதலிடத்தில் இருப்பது என்பதை விட தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே என் ஆசை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்வதுண்டு.
தொழில்துறையில் அவரது ஆசை நிறைவேறப்போவது நிச்சயம். முதலிடம் கிடைக்கும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை!



