பிரபலமானவர்களைத் தாக்கினால் பரிசு என அறிவித்து தொகையையும் குறிப்பிடும் புதிய கலாச்சாரம் தமிழகத்தில் உருவெடுத்துள்ளது.
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ தாக்கினாலோ ரூ.1 லட்சம் பரிசு தருவேன் என பாமக மாவட்டச் செயலாளர் ஒருவர் அறிவித்தார்.
முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசிவிட்டார் எனக்கூறி, நடிகர் விஜய் சேதுபதியை யாரேனும் தாக்கினால் அவருக்கு ரூ.1001 பரிசளிப்பேன் என இந்து மக்கள் கட்சி அறிவித்தது.
தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து விட்டதாக இன்னொரு குற்றச்சாட்டு.
இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு பரிசாகப் பணம் வழங்கப்படும் என மதுரை பாஜக தலைவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பொதுவாக ஒருவர் பேச்சில் அவதூறு இருந்தாலோ வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தாலோ அதனை எதிர்கொள்ள இந்திய தண்டனைச் சட்டங்கள் உள்ளன. காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம், நீதிமன்றத்தை நாடலாம்.
தேவையானால் போராட்டம் நடத்தி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். இப்படி எத்தனையோ வழிகள் இருந்தபோதிலும் அதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ கொடுங்குற்றவாளிகளைப் பிடித்துத் தருவோருக்கு பரிசுத் தொகை அறிவிப்பது போல, பிரபலங்களை உதைத்தால் பரிசு, தாக்கினால் பரிசு என்று அறிவிப்பது சரிதானா?
குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பேசியது தவறாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அதற்காக அவர்களைத் தாக்கினால் பரிசு என அறிவிப்பது மட்டும் நியாயமாக இருக்குமா? அதுவும் தவறு தானே! இரு தரப்பினரும் களமிறங்கி ஏடாகூடமாக ஏதேனும் நடந்தேறினால் அதற்கு யார் பொறுப்பேற்பது? & இது சமூக ஆர்வலர்களின் கேள்வி.
இது போன்ற பிரச்சினைகள் உருவாகாதபடி பேசுவதில் பிரபலங்கள் மட்டுமல்ல அனைவருமே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் தாக்கினால் பரிசு என அறிவிப்பதும் பெருந்தவறு.
அப்படி அறிவித்தவர்கள் மீது அரசு தரப்பில் வழக்குகள் பதியப்பட்டாலும் அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்களும் மவுனம் காக்காமல் கண்டிக்க வேண்டும்.
அப்போது தான் இந்த கலாச்சாரம் தொடராது. மொத்தத்தில், இந்தக் கலாச்சாரம் தேவையற்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.



