தீபாவளிக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே, கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை மணியை ஒலித்திருந்தன. அந்த மணியோசை பெரும்பாலானவர்கள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக அலைஅலையாக மக்கள் தலைகளைக் காண முடிந்தது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இடையில் இருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைவீதிகளிலும், மால்களிலும் கடைசி நேர வியாபாரம் களைகட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
மக்களிடையே சமூக இடைவெளியை காணோம். பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்தாலும், அதனை அணிய மறந்த பலரும் கண்ணில் படுகின்றனர். தீபாவளி கொண்டாட்டம் கொரோனா பரவலை அதிகப்படுத்திவிடக்கூடாது.
அண்டை மாநிலமான கேரளத்தில் ஓணம் பண்டிகைக்குப் பின்னர், தொற்றுப் பரவல் மிக அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. தற்போது அங்கு தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தாலும், கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என களைகட்டும். கேரளத்தில் ஓணம் பண்டிகை உணர்த்திய பாடத்தை மறந்துவிடக்கூடாது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து தொற்று பரவும் வழியை அடைக்க வேண்டும். இதில் சமரசத்துக்கு இடமே இல்லை.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பெற்றோர்கள் எப்படி எச்சரிக்கையாக இருப்பார்களோ, அதைவிட இரு மடங்கு எச்சரிக்கையை கொரோனா தடுப்பிலும் காட்ட வேண்டியது அவசியம். கொரோனா தொற்று எனும் இருளை அழிக்கும் பண்டிகையாக தீபாவளி மாறட்டும்; மாற வேண்டும்!



