தஞ்சையில் தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பக்தர்கள் பலியாகியுள்ளது மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது களிமேடு கிராமம். இங்கு அப்பர் சாமிகள் மடம் உள்ளது. இங்கு தேர் திருவிழா நடந்தது.
விழாவை காண அப்பகுதியிலுள்ள ஏராளமான கிராம மக்கள் கூடி இருந்தனர். 5 அடி உயர சப்பரத்தில் அலங்கார இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்ததால் 14 அடி உயரம் கொண்டதாக தேர் உயர்ந்து காணப்பட்டது.
சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததால் மேல் பகுதியை மடக்காமலேயே நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது தேரின் உள்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரின் எடை அதிகமாக இருந்ததால் தேர் ஒரு பக்கமாக சென்றது. வளைவில் திரும்பும் போது தேரின் மேல்பகுதி மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பியின் மீது உரசி தீப்பிடித்தது.
இதில் தேரில் இருந்தவர்களும், தேர்த்திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேர்த் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் தாக்கியதும் கண் இமைக்கும் நேரத்தில் தேரில் இருந்த பூசாரி மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் என 11 பேரும் உடல் கருகி செத்தனர். இதில் 2 சிறுவர்களும் அடங்குவர்.
மின்சாரம் தாக்கி பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் மருத்துவமனைக்கு திரண்டு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அப்பகுதி முழுவதுமே சோக மயமாக கண்ணீரும் கம்பலையுமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு காயமடைந்து சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்துள்ளார். தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையையும் வழங்கி இருக்கிறார்.
தாங்க முடியாத துயரச் சம்பவம் நடந்து விட்டது. இந்த சோகத்தை காலம் தான் கரைக்க வேண்டும்!



