குன்னூர் அருகே காட்டேரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படை தலைமை தளபதி, அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என 14 பேரும் உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
குறிப்பாக பிபின் ராவத்தின் ராணுவ சேவை பெரிதும் போற்றப்பட்டது. நாடே அஞ்சலி செலுத்திய நிலையில் பிபின் ராவத் வீரமரணத்துக்கு ஓர் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த பகுதியிலேயே நினைவு சின்னம் அமைய வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. மேலும் காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் பெயரை சூட்ட வேண்டும் என்று மீட்பு பணியில் தங்கள் பங்கை செலுத்திய மலைவாழ் கிராம மக்களும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிமடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசுடனும், உயர் ராணுவ அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.
அப்படி ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாகும்; வெளியாக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. நினைவு சின்னம் அமைந்தால், தமிழக மக்களின் வீரவணக்கத்துக்கு உரியதாக இருக்கும்; தேச பக்திக்கு ஓர் அடையாளமாகவும் திகழும்.
விரைவில் அறிவிப்பு வெளியாகட்டும்; வீரவணக்கம் செலுத்த தயாராவோம்!



