fbpx
Homeதலையங்கம்தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை

தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை

2016ம் ஆண்டில் அன்றைய முதல்வராக இருந்த ஓ.பி.எஸ், தமிழ்நாடு அரசு பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தமிழ்நாட்டை சாராத யார் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம் என்றும், தேர்வு மொழியாக தமிழ் இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து மின்வாரியம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தை சாராத எண்ணற்ற வேறு மாநிலத்தவர்கள் பணி ஆணை பெற்று ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக தமிழ்நாடு அரசின் வேலைகள் தமிழருக்கே தரப்படும் என அறிவித்திருந்தது.

தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக அரசு தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் வகையில், இனி டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அரசாணையை டிசம்பர் 3ம் தேதி வெளியிட்டது.

குரூப்-2,குரூப்-4 தேர்வுகள் முறையே 2022 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நேற்று அறிவித்தார். மேலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் என்றும் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு பணிகளும் தமிழர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு முதற்காரணம் யார்? அந்த பெருமை தமிழகத்தைத் திறம்பட வழிநடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினையேச் சேரும்.

தமிழ் ஆட்சியை, தமிழ் இன ஆட்சியை அவர் நடத்தி வருகிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டு பணி இடங்களில் தமிழ் தெரியாதவர்கள் வந்துவிட்டார்கள் என்பது தமிழ் ஆர்வலர்களின் வேதனையாக இருந்தது.
அது ஒரே ஒரு அரசாணை மூலம் துடைத்தெறியப்பட்டுள்ளது.

இந்த மகத்தான கடமையை நிறைவேற்றியதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் புதிய மகுடத்தை சூட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாநில மக்களுக்கு நிறைவான சேவை செய்ய வேண்டுமானால் தமிழ்நாட்டு அரசு பணியிடங்களில் அமர்ந்திருப்பவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் தேவை என்பதை யாரேனும் எதிர்க்க முடியுமா? தன் வளர்ச்சியில் புதிய உயரத்தை தொட்டுள்ளது தமிழ்.

தமிழ் வாழ்க! தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!!

படிக்க வேண்டும்

spot_img