ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டவர் ஒரு வடமாநிலத்தவர். அவரிடம் துப்பாக்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணிடம் இருந்து சங்கிலி பறித்த சம்பவத்தை அடுத்து அவரைத் தேடவும், கைது செய்யவும் காவல் துறை முயன்றபோது அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி மோதல் சாவில் கொல்லப்பட்டவர் ஒரு குற்ற நடத்தையர்.
கொடுங்குற்றங்களைச் செய்வதையே தங்களது இயல்பாக கொண்டிருப்பவர்கள் மீது பொதுமக்களி டம் எழுகின்ற அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தகைய மோதல் சாவுகள் ஒரு தீர்வாக முன்மொழியப்படுகின்றன.
ஆனால் இத்தகைய மோதல் சாவுகள் வெறும் சட்டம் & ஒழுங்குப் பிரச்சினை மட்டுமின்றி, மனித உரிமைப் பிரச்சினையும் கூட.
குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதே காவல்துறையின் பொறுப்பே அன்றி தண்டனை தருகிற அதிகாரத்தைத் தானே எடுத்துக் கொள்வது அல்ல.
இந்துத்துவ எதிர்ப்பு, மதச்சார்பின்மை நிலைப்பாடு ஆகியவற்றுக்காக திமுகவை ஆதரித்து வரும் மனித உரிமை ஆர்வலர்களும் கூட மோதல் சாவுகள் விஷயத்தில் தற்போது திமுகவுடன் முரண்பட்டு நிற்கின்றனர்.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட மோதல் சாவுகள் கூடாது என்ற தனது கருத்தை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது. இன்னொரு மோதல் சாவு ஏற்படாது என்ற உறுதியை முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
குற்ற நடத்தையர்களைத் தேடிப்பிடித்து அவர்களி டமிருந்த ஆயுதங்களை கைப்பற்றியதற்காக கடந்த சில வாரங்களுக்குமுன் தமிழ்நாடு காவல் துறை பாராட்டப்பட்டது.
ஆனால் இப்போது அதன் எல்லை மீறல்கள் கண்டிக்கப்படுகின்றன. எந்தவொரு குற்றச்செயலும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாகவே தண்டிக்கப்பட வேண்டும்.



