கொரோனா கொடுந்தொற்று மீண்டும் லேசாக தமிழ்நாட்டில் தலை நீட்டுகிறது. யாரும் பீதி அடையத் தேவையில்லை.
நமது தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அரசின் அதிகாரிகளும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் தடுப்பு முயற்சிகளில் மும்முரமாக முன் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
ஒன்றிய அரசும் தன் பணியை செவ்வனே செய்து வருகிறது.இனி மிகவும் வீரியம் மிக்க கொரோனா தொற்று உருவாகும் ஆபத்து உள்ளது.
கொரோனா தொற்றுநோய் ஒரு மாறுபாட்டை உருவாக்கும் அபாயத்தில் நாம் இருக்கிறோம், அது அதிக அளவில் பரவக்கூடிய மற்றும் இன்னும் ஆபத்தானதாக இருக்கும் என உலக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனை தடுப்பூசிகளும் முக கவசமும் தான் தடுக்க முடியும். இதைத் தவிர வேறு வழி இல்லை.
எனவே தான் முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் மிக மிக முக்கியம் என அரசு மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. சிறார்கள் உள்பட அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிப்படி தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். இது அரசுக்காக அல்ல, நமக்காக…நம் நலத்திற்காக.
அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் இயங்குகிறது.
சென்றவுடன் சில மணித் துளிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரும்பலாம். எவ்வித இடையூறும் இல்லை,- காலதாமதமும் ஏற்படாது.
கொரோனா பெரும் தொற்று தற்போது குறைந்துள்ள போதிலும் அது எந்த நேரத்தில் தனது வீரியத்தை மீண்டும் காட்டும் என்பதை யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் கொரோனாவே மறைந்து விட்டது போல நினைத்து சுதந்திரமாக நடமாடுகின்றனர். 90 சதவீதத்தினர் முக கவசம் அணிவதைத் தவிர்த்து விட்டனர்.
இந்த நிலை மாற வேண்டும். கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்திட வேண்டும்.
உஷாராக இருங்கள், மக்களே!



