திருநெல்வேலியில் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு ரூ.156.25 இலட்சம் கல்விக் கடன்களை வழங்கினார் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்.
கல்வியில் முன்னேற்றம் அடையும்போது எல்லா துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும் நம் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
இளம் தலைமுறையினரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை 25-.06.-2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி நூல்களை வழங்கி ரூ.156.25 இலட்சம் கல்விக் கடன்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 1536 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பொறியியல் படிப்பில் என்னென்ன பாடத்திட்டங்கள் உள்ளன என்பதையும், எந்த பாடத்திட்டங்கள் படித்தால் என்னென்ன வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் பேராசிரியர் ஆரோக்கியராஜ், சினிவாசன், சிவகுமார் ஆகியோர் எடுத்துக் கூறினர்.
சென்னை மேரிஸ் கல்லூரி முதல்வர் மரு.ரேணுகா ராஜரத்னம், கலை அறிவியல் கல்வி தொடர்பான பாடத்திட்டங்கள், அவற்றைப் பயின்றால் என்ன வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.
பேஷன் டெக்னாலஜி (Fashion Technology) பாடத்திட்டங்கள் குறித்து விகிதா விளக்கம் அளித்தார். கல்லூரி மாணவ, மாணவிகளின் தற்போதைய மனநிலையை மாற்றி உயர்கல்வி குறித்தும் அதை தேர்ந்தெடுப்பது குறித்தும் சிவகுமார் பழனியப்பன் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இந்த “கல்லூரி கனவு” நிகழ்ச்சி தங்களின் உயர்கல்விக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்ததற்கு முதல்வருக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
“குழப்பம் தெளிந்தது; நம்பிக்கை பிறந்தது”
எங்கள் பெயர் மு.மனிஷா பேபி, தையிபா மர்ஜான். நாங்கள் வள்ளியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறோம். இன்று நடைபெற்ற நான் முதல்வன் என்ற கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம்.
இங்கு ஏராளமான பேராசிரியர்கள், பொறியாளர்கள், மன நல வல்லுநர்கள் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்து வழிகாட்டினார்கள். உயர்கல்வியில் எந்த பாடத்திட்டங்களை படிக்கலாம் என்ற பல்வேறு குழப்ப நிலையில் இருந்த எங்களை எளிமையான முறையில் கல்வி கற்பது மற்றும் எந்தவொரு செயலும் கடினம் கிடையாது.
ஒரே நிலையில் இந்த பாடத்திட்டத்தை நான் தேர்வு செய்யணும் என்ற நோக்கத்தோடு தேர்வு செய்து முழு கவனம் செலுத்தி ஒரே மனநிலையில் படியுங்கள். நீங்க நினைத்த பாடம் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்கள்.
வரும் காலங்களில் அறிவியல் தொழில்நுட்பங்களோடு இணைந்து, எந்த பாடங்கள் படித்தால் என்ன வேலைவாய்ப்பு கிடைக்கும் போன்ற பல்வேறு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
குழப்பமான மனநிலையில் இருந்த நாங்கள் இந்த “கல்லூரி கனவு” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஒரு நிலை மனதோடு கல்லூரியில் என்ன படிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துள்ளோம். எங்களுக்கு ஒரு நம்பிக்கையும், ஆர்வத்தையும் இந்நிகழ்ச்சி தந்துள்ளது.
இத்திட்டத்தினை தொடங்கி வைத்த முதல்வருக்கு எங்களைப் போன்ற மாணவ, மாணவிகளின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
தொகுப்பு:
இரா.ஜெய அருள்பதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருநெல்வேலி.



