fbpx
Homeதலையங்கம்இலவசம் அறிவிப்பதில் பாஜகவில் முரண்பாடு!

இலவசம் அறிவிப்பதில் பாஜகவில் முரண்பாடு!

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் ரூ.14,850 கோடியில் அமைக்கப்பட்டுள்ள விரைவு சாலையை அண்மையில் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். மேலும், “இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்“ எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வு முடிந்த அடுத்த சில நாட்களிலேயே உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் மோடிக்கு நெருக்கமானவருமான யோகி ஆதித்யநாத், ரக்ஷா பந்தனை ஒட்டி 2 நாட்கள் அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நேரத்தில் இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம், பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிரான கருத்தை நேற்று பதிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி இலவசத் திட்டங்களை எதிர்த்துப் பேசிய நிலையில், யோகி ஆதித்யநாத் இலவசத் திட்டம் அறிவித்திருப்பது பா.ஜ.க கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொள்கையில் முரண்பாடு காரணமாக மோடிக்கும், யோகிக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வரும்போதெல்லாம் என்னென்ன இலவசங்களை அறிவிப்பார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பது வழக்கமாக… பழக்கமாக மாறி விட்டது. இதனை அடியோடு துடைத்தெறிவது என்பது முடியாத காரியமாகி விட்டது. இதைத் தான் உச்சநீதிமன்றக் கருத்தும் உறுதிப்படுத்தி உள்ளது.
குஜராத்தில் ஆம்ஆத்மி வென்றால் பெண்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குவோம் என்று அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

முதலில் தங்கள் கட்சியில் முரண்பாடு ஏற்படாமல் பாஜக ஆளும் மாநிலங்களில் பிரதமர் மோடி இலவசங்களை அடியோடு ஒழிக்க வேண்டும். எந்த இலவச அறிவிப்பும் இல்லாமல் வரும் தேர்தல்களை பாஜக சந்திக்கும் என சவால் விடத் தயாரா? உடனடியாக இதற்கு பதில் கிடைக்க வாய்ப்பில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img