சாதிக்கு எதிரான சமூக நீதிப்போர் தொடங்கி பல்லாண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையான வெற்றி கிட்டவில்லை என்பது தான் உண்மை. சாதிக் கொடுமையின் உச்சக்கட்டமாக ஆணவக் கொலைகள் அரங்கேறுவதும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. அந்த அளவுக்கு சாதி சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது.
தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து சாதி ஒழிப்பு போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் அடுத்த கட்ட நகர்வாக, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து தமிழக அரசு உறுதிமொழி குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகமெங்கும் ‘சமத்துவ நாள்’ கொண்டாட்டத்தில் உறுதி மொழி ஏற்கப்படுகிறது.
அரசின் அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது: சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ê
சமூகத்தில் புரையோடிப்போன சாதி என்னும் அரக்கனை உடனடியாக அழித்தொழிக்க முடியாது என்றாலும் அதனை துடைத்தெறியும் நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சாதியின் பெயரால் மனிதனை அடையாளம் காணும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்திட, சாதிக்கு எதிராக முடிந்தவரை அரசு மட்டுமல்ல ஒவ்வொருவரும் போராட வேண்டும்; போராடுவோம்!



