ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவருமே அதிமுகவைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை விவகாரத்தால் இரு தரப்பிலுமே அவரவர் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர்.
பெரும்பாலும் எடப்பாடிக்கே சாதகமான சூழல் உள்ளது. இருந்தாலும், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழல் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.
தான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், தான் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது, தன் கையெழுத்து இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் ஓபிஎஸ் இருப்பதாக சொல்கிறார்கள்.
இல்லாவிட்டால், இது தொடர்பாக சட்டரீதியான பிரச்சனையை கிளப்புவார், எடப்பாடிக்கு நெருக்கடி தருவார் என்றே கணிக்கப்படுகிறது.
அதனால்தான், ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ்சை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு வருகிறார். இதற்கான காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருகிறார்.
இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டதுடன், அதுகுறித்து ஈபிஎஸ் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று, பிரச்சனையை எடப்பாடி பக்கமே திசை திருப்பி விட்டுள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ இன்னும் பதில் சொல்லவில்லை.
ஒருவேளை பகிரங்கமாக ஒற்றை தலைமை பற்றி சொல்லிவிட்டால், ஓபிஎஸ் கோர்ட்டில் போய் நிற்பார் அல்லது தேர்தல் ஆணையத்தில் போய் நிற்பார். இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு செக் வைப்பார் என்பதை எடப்பாடி உணராமல் இல்லை.
ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பார்த்தால், ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட அரசியல் என்னவாக இருக்கும் என்ற யூகமும் கிளம்பி உள்ளது. சசிகலா + ஜெயலலிதா + ஓபிஎஸ் 3 பேரின் போட்டோக்களை வைத்து போஸ்டர்களை ஒட்டி உள்ளார்கள்.
அதற்கேற்றார்போல், சசிகலா விஷயத்தில் ஓபிஎஸ் இந்த நிமிடம் வரை கறார்தன்மையை வெளிப்படுத்தவும் இல்லை.
ஒருவேளை, ஓபிஎஸ்ஸின் வழிக்கு எடப்பாடி பழனிசாமி, இணங்கி சென்றால் இப்போதுபோலவே, ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் இனியும் தொடரக்கூடும் என்கிறார்கள்.
அல்லது ஓபிஎஸ்சைப் புறக்கணித்தால், இலையை முடக்கி நிச்சயம் கட்சிக்கே செக் வைப்பார். இந்த பிரச்சனைக்கு 2 தீர்வு இருப்பதாக சொல்கிறார்கள்.
ஒன்று புது பதவி உருவாக்கி, இரு தலைவர்களும் கட்சியை நடத்துவது, அல்லது எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற துணிச்சலுடன் எடப்பாடி களமிறங்குவது. இதில் எது நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் யாருக்கு வெற்றி? பொறுத்திருந்து பார்ப்போம்!



