fbpx
Homeபிற செய்திகள்திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பாரா பிரதமர் மோடி?

திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பாரா பிரதமர் மோடி?

தலைநகர் சென்னையில் அய்யன் வள்ளுவருக்கு கோட்டமும், கடைக்கோடி குமரி முனையில் 133 அடி உயரச் சிலையும் அமைத்தவர் மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. அவர் வழியில் திருக்குறள் கருத்துகளை முன்னெடுத்துப் பரப்பும் பணியில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் களமிறங்கி செயல்பட்டு வருகிறார்.


டிசம்பர் மாதம் கடைசி வாரத்தை ‘குறள் வாரம்’ என்று தற்போதைய தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இளைய சமுதாயம், மாணவர் மத்தியில் குறளைக் கொண்டு சேர்க்கும் வகையில் முற்றோதல் போட்டிகளை நடத்தி வருகிறது அரசு. திருக்குறள் மாணவர் மாநாட்டை அரசு நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான், ‘திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்’ என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து எழுதிய ‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ என்ற நூலை வெளியிட்டு உரையாற்றிய அவர், திருக்குறளை தேசிய நூலாக ஆக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். இதனை முன்னெடுக்கும் அமைப்பு ஒன்றின் தேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


‘‘திருக்குறள் எழுதப்பட்ட மொழி தமிழாக இருந்தாலும் எழுதப்பட்ட கருத்துகள் உலகிற்கு பொதுவானவை ஆகும். இத்தகைய பொதுமைத் தன்மை வேறு எந்த மொழி நூலுக்கும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே நீதியாகச் சொன்னார். இம்மூன்றும் நமக்கு மட்டும் அல்ல, உலகம் முழுமைக்கும் பொதுவான நீதியாகும்.


‘உலகளாவிய மனிதனின் ஒரு பாடகர்’ என்று வள்ளுவரை வாயாரப் புகழ்ந்தார் ஜி.யு.போப். ‘உலகச் சிந்தனையை உள்ளடக்கிய தொகுப்பு’ என்று சொன்னார் ஆல்பர்ட் சுவைட்சர். ‘இன்னா செய்யாமை’ அதிகாரத்தை தனது கடிதங்களில் மேற்கோள் காட்டினார் லியோ டால்ஸ்டாய். வள்ளுவரின் புலால் மறுப்பு குறளை வியந்து எழுதி இருக்கிறார், பெர்னாட்ஷா.


‘சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் மனித இனம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய சிந்தனைகளைச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்’ என்று 1848 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு அறிஞர் எம்.ஏரியல் சொல்லி இருக்கிறார். அறிவுக்கு முக்கியத்துவம் தருவதை இங்கர்சால் போற்றி இருக்கிறார். ‘அனைத்து உலகத்துக்கும் கலங்கரை விளக்கம் திருக்குறள்’ என்றார் வீரமாமுனிவர்.


வீரமாமுனிவர் முதன் முதலில் 1730 ஆம் ஆண்டு திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். 1747 ஆம் ஆண்டு பிரெஞ்சுமொழியில் திருக்குறள் நூல் வெளியானது. எனவே திருக்குறள் இந்த உலகிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துவிட்டது. இந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை வலிமை பெற்றுள்ளது.


‘உலகில் எங்கு போனாலும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி’ என்று அவர் சார்ந்த கட்சியினரும் அமைப்பினரும் மார்தட்டிப் பெருமை பாராட்டுகின்றனர். இது உண்மையானால், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.


செய்வாரா பிரதமர் நரேந்திர மோடி?

படிக்க வேண்டும்

spot_img