கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். நிலச்சரிவில் சிக்கி 427 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 நாட்களாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். வயநாட்டிற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடி இன்று வயநாடு வந்துள்ளார். அவர் ஹெலிகாப்டரில் சென்றபடி வான்வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றும் பார்வையிட்டுள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி உதவி வேண்டும் என கேரள அரசு கோரி உள்ளது. அதேநேரத்தில் உலகின் கவனத்தையே ஈர்க்கும் வகையில் பெருமளவில் மனித உயிர்களைப் பறித்த நிலச்சரிவைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் கேரள அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில் தான் பிரதமர் மோடி இன்று வயநாடு வந்துள்ளார். அவரது ஆய்வுக்குப் பிறகு வயநாடு நிலச்சரிவுக்கு அளிக்கப்படும் நிவாரணம் குறித்த மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதில் ஐயமில்லை.
வயநாடு நிலச்சரிவால் கேரள மாநில வரைபடத்தில் ஏற்பட்டுள்ள வடுவை மிக விரைவாக அறவே போக்கும் வகையில் என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி? இதுவே கேரள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!