2021 சட்டமன்றத் தேர்தலை பாஜக, பாமகவுடன் இணைந்து எதிர்கொண்டது அதிமுக. அந்த கூட்டணிக்கு 75 இடங்கள் கிடைத்தன. பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, கடந்த ஆண்டு, கூட்டணி முறிந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிகள் கூட்டணி அமைத்தன. பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இரு அணிகளுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு பேட்டி அளித்தபோதெல்லாம் ‘‘பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிவந்தார்.
எனினும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக, த.வெ.க போன்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன்தான் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபடக் கூறிவிட்டார்.
இந்த சூழலில் திருச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திடீர் திருப்பமாக, தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்கு தனது அணுகுமுறையை மாற்றி எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தது விவாதப் பொருளாக மாறியது.
“இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேர்தலுக்கு இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் யார் யாருடன் கூட்டணி என்பது தெரியும். அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்கள் தலைமையை ஏற்று, ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் இணைக்கப்பட்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம்” என்று அவர் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு வழக்கம்போல் மறுப்பார் என கருதப்பட்ட நிலையில், அவர் இப்படியொரு பதிலை அளிப்பார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. திருமாவளவனின் முடிவு எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கத்தை ஏற்படுத்தி பேச வைத்து விட்டதோ என்னவோ?
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்றைய தினம் அளித்த பேட்டியில், பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவுமில்லை. எடப்பாடியின் பேட்டி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது
என்ற விளக்கம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் மற்ற நிர்வாகிகள் மழுப்பலான பதிலையே அளித்திருக்கின்றனர்.
நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியிடம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முந்தைய நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் ‘அதெல்லாம் ரகசியம் எதுவாக இருந்தாலும் இன்று நடந்த நிகழ்ச்சியை பற்றி மட்டும் கேளுங்கள்.. கூட்டணி தொடர்பாக எதுவும் பேச முடியாது’ என மறுத்துவிட்டார். இதே போன்ற பதிலைத்தான் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் தெரிவித்திருந்தார்.
கூட்டணி தொடர்பாக ஜெயக்குமாரின் கருத்து தெளிவாக இருக்கும் நிலையில் மற்ற முன்னாள் அமைச்சர்கள் முரண்பட்ட, மழுப்பலான பதிலை கூறியிருக்கின்றனர், இதனால் பாஜக & அதிமுக கூட்டணி தொடர்பான விவாதம் மீண்டும் அதிமுகவில் எழுந்திருக்கிறது என்பது நிச்சயமாகி இருக்கிறது. அதனால் மாறுபட்ட கருத்துகளை அதிமுக மூத்தத் தலைவர்களே வெளிப்படுத்தி உள்ளனர்.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஏதோ ஒரு திட்டத்தோடு அதிமுக காய் நகர்த்துகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. 200 இடங்களில் வெல்ல வேண்டும் என திமுக இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், வலுவான அந்தக் கூட்டணியை வீழ்த்த பழைய கூட்டணியை புதுப்பிக்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டாரா? என்பது வரும் நாட்களில் தெரியும்!