fbpx
Homeபிற செய்திகள்ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பெண்ணுக்கு வாக்குரிமை!

ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பெண்ணுக்கு வாக்குரிமை!

இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான ஈழத் (இலங்கை) தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்தவகையில் சொத்து உடைமைகளை விட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்த ஈழத் தமிழர் அகதிகள் ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அவர்கள் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன் என்ற 38 வயது பெண்மணி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் பெற்றுள்ளார். அதாவது இந்திய குடியுரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர், திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த வாக்கு உரிமைக்கான அவரது பயணம் 2021 ல் தொடங்கியது. முதலில் இந்திய பாஸ் போர்ட்டுக்காக அவர் விண்ணப்பித்தபோது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார்.
2022 ஆகஸ்ட் 12-ம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு, நளினி மண்டபத்தில் பிறந்த சான்றிதழைக் காட்டி, அவருக்கு இந்திய பாஸ்போர்ட்டை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பின்னர் ஒரு வழியாக சட்ட போராட்டம் நடத்தி தற்போது வாக்காளர் அடையாள அட்டையையும் பெற்றார் நளினி. அவர் நாளை மறுதினம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார். ஈழத்தமிழர் அகதிகள் முகாமில் இருக்கும் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது நாட்டிலேயே இது தான் முதல்முறையாகும்.
மாநிலம் முழுவதும் ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களில் 58,457 பேர் வாழ்கின்றனர். நளினி போன்று முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் குடியுரிமை பெற்று விரலில் மை பூசும் நாள் விரைவில் வரத் தான் போகிறது என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

முகாம்களில் உள்ள அனைத்து அகதிகளும் இந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்துள்ளார் நளினி. அவருக்கும் அவரது சட்டப் போராட்டத்தில் உறுதுணையாக நின்ற வழக்கறிஞர் ரோமியோராய்க்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
பாராட்டுகள் நளினி இந்திய மண்ணில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் வசந்த காலம் பிறக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img