விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் பொது நிதி மற்றும் 15வது நிதிக்குழு மானியத்த்தின் கீழ் 57 திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சீனிவாசன் மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 44 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தலைவரிடம் வலியுறுத்தி கூறினர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தலைவர் சுமதி ராஜசேகர் உறுதி கூறினார்.
திட்டப்பணிகள்
திட்டப்பணிகள் இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி யூனியன் பகுதியில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள், மேல்நிலைத்தொட்டிகள் போன்றவற்றை இடித்து அகற்ற அனுமதி கோரும் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. விவாதத்திற்கு பின் 26 கட்டிடங்களை இடித்து அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2022-2023-ம் நிதியாண்டில் யூனியன் பொது நிதியிலிருந்து 28 திட்ட பணிகளை மேற்கொள்ளவும், 15-வது நிதி குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட நிதியில் 15 திட்ட பணிகளையும் வரையறுக்கப்படாத நிதியில் இருந்து 14 திட்ட பணிகளையும் மேற்கொள்ள மன்ற ஒப்புதல் கோரப்பட்டது.
விவாதத்திற்கு பின் மொத்தம் 57 திட்ட பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகளை விரைவாகவும், தரமாக முடிக்க வலியுறுத்தினார்.