Homeபிற செய்திகள்திமுகவின் கொள்கையை பிரதிபலிக்கும் விஜய்!

திமுகவின் கொள்கையை பிரதிபலிக்கும் விஜய்!

தமிழக அரசியலில் நேற்றைய முக்கிய செய்தியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசிய நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியதாகத் தான் இருக்கும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கும் விழாவில் அவர் இப்படிப் பேசி இருக்கிறார்.

தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தனது முழு ஆதரவு என அவர் தெரிவித்ததும் பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த விழாவில் விஜய் பேசுகையில், நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். நீட் மாநில உரிமைக்கு எதிரானது என்றும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற வகையில் கல்வி திட்டம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மாநில மொழியில் படித்துவிட்டு மத்திய அரசு பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் மாணவர்களுக்கு அது எப்படி சாத்தியமாகும்? என்றும் கேள்வி எழுப்பினார். சமீபத்திய நீட் குளறுபடியால் நீட் மீதான நம்பகத்தன்மை மக்களுக்கு முற்றிலும் அழிந்துவிட்டது. நீட் விலக்கு என்பதே இதன் ஒரே தீர்வு என்று குறிப்பிட்ட விஜய், அடுத்ததாக, நீட் விலக்கு குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு முழு ஆதரவு என வெளிப்படையாக ஆளும் திமுக அரசின் நீட் விலக்கு நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும், சிறப்பு பொதுப்பட்டியல் உருவாக்கி கல்வி, சுகாதாரம் மட்டும் அதில் சேர்க்க வேண்டும். அனைத்து துறைகளும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுக்கும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்று மாநில உரிமை பற்றியும் பேசினார்.
ஆளும் திமுக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் நீட் தேர்வு குளறுபடிகள் குறித்தும் , நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நேற்று (ஜூலை 3) திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி அதனை மாநில பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இப்படியான சூழலில் இதே கருத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேடையில் பேசியிருப்பது நீட் விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டிற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்!

படிக்க வேண்டும்

spot_img