வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் வடக்கு பகுதியில் உள்ள வேலூர் நறுவீ மருத்துவமனையில், தேசிய உடல் உறுப்புத் தான தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 5, 2025 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது உறுப்பு தானம் செய்த நபர்களையும், அதன் மூலம் பயனடைந்தவர்களையும் மருத்துவமனை துணைத்தலைவர் அனிதா சம்பத் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இந்தியாவில் முதல்முறையாக 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி தேசிய உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை, மருத்துவமனை தலைமை இயக்குநர் சரவணன் ராமன் வரவேற்று பேசினார். தமிழக அரசு, நறுவீ மருத்துவமனையை இருதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி பெற்ற மருத்துவமனையாக அறிவித்துள்ளது. இதன்படி, நறுவீ மருத்துவமனையில் பலவித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போதுவரை 10,827 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாகவும், இது தேசிய அளவில் முதல் இடத்தில் இருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் வேலூர் கிளைத் தலைவர் டாக்டர் வெங்கட்ரமணன் உரையில் தெரிவித்தார். மேலும், இந்தியாவிலேயே தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உறுப்பு தானம் நடைபெறுவதாகவும் கூறினார்.
இதய நோய் மற்றும் சிறுநீரக நிபுணர் டாக்டர். இதயசந்திரன், “ஒருவர் தனது உடலில் உள்ள 9 உறுப்புகளை தானமாக வழங்க முடியும்.
ஆயினும், ஒரு லட்சத்தில் பத்து பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன்வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை உயர்த்த விழிப்புணர்வு முக்கியம். குறிப்பாக, மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை பெறுவது, மற்ற உயிர்களுக்கு வாழ்வளிக்க முடியும் என்பதையும் சமூகமெங்கும் புரியச் செய்ய வேண்டும்,” எனக் கூறினார்.
மேலும், உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்கள், transtan.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் தங்களை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பல்வேறு மருத்துவ அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறப்பான முயற்சியாக அமைந்தது.



