fbpx
Homeபிற செய்திகள்உங்கள் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? என கேட்டு ஐநா சபையே சிரிக்கிறது நீலகிரி திமுக வேட்பாளர்...

உங்கள் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? என கேட்டு ஐநா சபையே சிரிக்கிறது நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா பேச்சு

நீலகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும், தற்போதைய நீலகிரி எம்பி-யுமான ஆ.ராசா மீண்டும் போட்டி யிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அவர் நீலகிரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட் பட்ட அண்ணாஜி ராவ் ரோடு, எம்.எஸ்.ஆர்.புரம், ஓடந்துறை,பெரிய பள்ளிவாசல் ரோடு, எம்ஆர்டி நகர், சங்கர் நகர்,கெண்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, ஆ.ராசா பேசியதாவது: இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பேராபத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளாக மோடி ஆண்டு கொண்டு குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போல் நாட்டை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்.

சொன்ன வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. நான் வந்தால் ரூ.15 லட்சம் வங்கியில் போடுவேன், 2 கோடி இளைஞர்களுக்கு ஆண்டொன்றிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவேன், விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு உற்பத்தியை தருவேன் என்று சொன்னார். அப்புறம் நதிகளை இணைப்பேன் என்றார். எதையும் செய்யவில்லை.
ஆனால்,அதை விட கொடுமை இந்தியாவைப்பார்த்து வெளிநாடுகள் எல்லாம் சிரிக்கின்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் இருக்கிறார். ஜார்கண்ட் மாநில முதல்வர் சிபுசோரன் ஜெயில் இருக்கிறார். ஜனநாயகம் இருக்கிறதா? இல்லையா? என அமெரிக்காவும், கனடாவும் வேடிக்கை பார்க்கின்றனர். கிண்டல் அடிக்கின்றனர் நம் நாட்டைப்பார்த்து.

அதையெல்லாம் விட கொடுமை ஐநா சபை சிரிக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் எல்லாம் ஜெயிலில் இருக்கிறார்களே என்று என்ன காரணம்? என்று.
இந்த நாட்டில் இந்து, முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எல்லா மொழி பேசுபவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டது தான் அரசியல் சட்டம்.அந்த அரசியல் சட்டம் இனிமேல் இருக்காது.

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது என அவர்களே சொல்லி விட்டார்கள்.
அரசியல் சட்டம் இல்லை என்றால் மதச்சார்பின்மை இருக்காது. மதச்சார்பின்மை இல்லை என்றால் மத நல்லிணக்கம் இருக்காது. ஒருவர் இன்னொருவரை அடித்துக்கொள்ள வேண்டியதுதான். இப்படி மத மோதலை தூண்டிவிட்டு,மத நல்லிணக்கத்தை கெடுத்து, மதவெறியை தூண்டி, ஊழலிலே திளைத்துக்கொண்டிருக்கிற இந்த ஆட்சியை யார் விமர்சித்தாலும் ஜெயிலுக்கு சென்று விடுகிறார்கள். பயமுறுத்துகிறார்கள். பத்திரிகைகளை பயமுறுத்துகிறார். டிவிகளை பய முறுத்துகிறார்.

தமிழ்நாட்டுக்கு வருவதே இல்லை. தமிழ்நாட்டை மதிப்பதே இல்லை. தூத்துக்குடி மூழ்கி விட்டது. திரு நெல்வேலி மூழ்கி விட்டது. ரூ.37 ஆயிரம் கோடி நமக்கு நஷ்டம். அந்த ரூ.37 ஆயிரம் கோடியை எங்களுக்கு கொடுங்கள், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
13 பேரை சுட்டுக் கொன்றார்கள் எடப்பாடி ஆட்சி காலத்தில். அப் போது, அவர் தான் பிரதமர். ஆனால், வரவில்லை. இப்படி தமிழ்நாட்டிற்கு ஆபத்து என்றால் எப்போதுமே வராத இந்த பிரதமர், இந்தியை மட்டுமே திணிக்கும் இந்த பிரதமர், தமிழை விரும்பாத இந்த பிரதமர், இப்போது மட்டும் பல்லடத்துக்கு வருகிறார், மேட்டுப்பாளையத்துக்கு வருகிறார். பெரம்பலூருக்கு வருகிறார்.திருச்சிக்கு வருகிறார்.எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.

ஆக தமிழ்நாட்டைப் புறக்கணிக்கின்ற, மதவாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர்.ஸ்டாலின் குரல் உங்களை அழைக்கிறது என்று சொல்லுகிறாரே? அந்த குரலுக்கு மதிப்பளித்து என்னை நாடாளு மன்றத்திற்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ் வாறு அவர் பேசினார்.
பரப்புரையின் போது திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் நவீன்,நகர செயலாளர்கள் முகமது யூனூஸ்,முனுசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img