கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதோடு வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.
அவர் நேற்று குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பள்ளிபாளையம் விசைத்தறிகள் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பகுதியாக உள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல நூல் விலை ஏற்றம் நெசவாளர்களை பாதிக்க செய்துள்ளது. சாயக்கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பொதுசுத்தகரிப்பு நிலையம் கட்டப்படும். எனவே இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடிநீர் பற்றாக்குறை உள்ள கிராமப்பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.