கோவை மாநகராட்சி சார்பில், தூய்மைப் பணியாளர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறும் வகையில் சிறப்பு அரசு சேவை முகாம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலை யரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தார்.
வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித் துறை, மருத்துவத்துறை, தாட்கோ, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட 12 துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நலத்திட்ட உதவிகளைப் பெற வழிகாட்டினர். மேலும், இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட தொழிலாளர் நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த முகாமில் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் 3,963 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 14 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்ட லத் தலைவர்கள், சுகாதாரக் குழுத் தலைவர், மாநகர நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



