தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பான கல்வி வழங்குவதை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு, சிறப்பான கல்வியினை தனியார் பள்ளிகளுக்கு நிகராக வழங்கி வருகின்றனர்.
மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு பள்ளி, சாமுவேல் புரம் பள்ளி, ஜின் பாக்டரி பள்ளி ஆகிய பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நவீன வசதிகள் உருவாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத் திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான போட்டியில், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது இடம்பிடித்தது.
இதற்கான விருது வழங்கும் விழா இந்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு விருது வழங்கி கௌரவித்தார். விழாவில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.