திருச்சி கருமண்டபம் பொன்னகரில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண விநாயகர் திருக்கோயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் இ-காணிக்கை செலுத்தும் வசதி துவங்கப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு பல்வேறு நடைமுறைகள் வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி கருமண்டபம் பொன்னகரில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண விநாயகர் திருக்கோயிலில் கூட்ட நெரிசலின்போது, பக்தர்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-காணிக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதன் துவக்க விழா இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி முதன்மை மண்டல மேலாளர் ஜி.ஸ்ரீராம் தலைமை வகித்தார். இ-காணிக்கை வசதியை நவீன் ஏஜென்சி உரிமையாளர் ஜோசப் ஜெரால்ட் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கருமண்டபம் கிளை மேலாளர் விஜயலக்ஷ்மி மற்றும் வங்கி அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இ-காணிக்கை சேவை துவங்கப்பட்டதும் பக்தர்கள் அனைவரும் கியூஆர் கோட் -ஐ பயன்படுத்தி காணிக்கை செலுத்தினர்.
இனி காணிக்கை செலுத்த ரொக்கப் பணத்தை கையில் வைத்திருக்கத் தேவையில்லை என்றும் விரும்பும் பணத்தை எளிதாக செலுத்தலாம் என்றும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.