fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டில் குவியும் வட மாநிலத் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் குவியும் வட மாநிலத் தொழிலாளர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சாரை சாரையாக வந்து சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “எங்கே பார்த்தாலும் வட இந்தியர்கள் இருக்கின்றார்கள்.

இது எங்க போய் நிற்க போகுது என்று தெரியவில்லை. எனக்கு ஒரே ஒரு நடுக்கம் தான். ஈழத்தில் நடந்தது இங்கு நடந்து விடுமோ?` என அச்சம் தெரிவித்திருந்தார்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து-வும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகளவு இருப்பதாகவும் இதனால் தமிழ்நாடு தொழிலாளர்களின் வாழ்வாதாரமே முடங்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜார்க்கண்ட், ஒடிசா, பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் வருகின்றனர்.

ஆரம்பத்தில் கட்டுமான தொழில், ஆடை உற்பத்தித் தொழிலில் மட்டுமே ஈடுபட்ட இவர்கள், தற்போது உணவகங்கள், செக்யூரிட்டி பணி, லிஃப்ட் ஆபரேட்டர் என, அனைத்து வித பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

அதேபோன்று, ஆரம்பத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் வேலை செய்துவந்த வெளிமாநிலத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிமாநிலத்தவர்களே.

இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) ஏப்ரல், 2022-இல் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் பெண்கள் 7.13 லட்சம் பேர், ஆண்கள் 27.74 லட்சம் பேர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வருவது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. அது தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவதையும் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

அதேபோல சமீபகாலமாக தமிழ்நாட்டில் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்களிலும் வட மாநிலத்தவர்கள் ஈடுபடுவதை பார்க்கிறோம். இந்த நிலையை மாற்றியாக வேண்டும் அல்லது கட்டுப்படுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இந்த விஷயத்தை தமிழ்நாட்டு அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏதேனும் ஒரு வகையில் தமிழ்நாட்டினரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img