பாஜக ஆளும் மாநிலங்களை விட இந்தியாவில் அதிக அளவில் கல்வி கற்றவர்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆண்ட கேரளாவிலும் கல்வி வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக நீதிக் கொள்கையினால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.
இந்நிலையில் திராவிட இயக்க ஆட்சியினால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக தமிழக ஆளுநர் சமீபத்தில் கூறி இருக்கிறார். இதேபோல ஒரு நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருகிற செயல்களைச் செய்யாமல் இப்படிப்பட்ட தேவையற்ற… சர்ச்சைகளை கிளப்பும் வகையில் பேசுவதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
`வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளை பார்க்கிறபோது, அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியது கவர்னரா? அல்லது தமிழக பா.ஜ.க.வின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
அவரை உடனடியாக கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அகம்- உள்ளத்தையும் குறிக்கும்; இல்லத்தையும் குறிக்கும். நாடு- தேசத்தையும் குறிக்கும்; தேடலையும் குறிக்கும்.
எங்கள் அகமும் தமிழ்தான். எங்கள் நாடலும் தமிழ்தான். எங்கள் தமிழ்அகமே தமிழ்நாடு தான். எங்கள் அகமும் புறமும் தமிழ்நாடு தான். அது விரிந்தது, பரந்தது, உயர்ந்தது, சிறந்தது.’ என பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து கண்டனக் குரலின் சத்தம் அதிகரித்து வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக இணையவாசிகள் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்திய அளவில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவேண்டும் என்றும், இந்தியாவின் ஓர் அங்கம்தான் தமிழ்நாடு என்றும் ட்வீட்கள் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு என்ற பெயரையே அழிக்க நினைக்கும் பாஜகவின் குரலே, ஆளுநர் வாயிலாக வெளிவந்திருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இது ஒன்றே தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொண்டு புரியாதவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு என்றும் தமிழ்நாடு தான். இதனை மாற்றும் முயற்சியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தமிழர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆளுநருக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டக்களம் காண வேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லை போலும்!



