2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். இதையடுத்து, மரபை மீறி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டதாகவும், அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது கண்டிக்கத்தக்கது என்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்தனர்.
இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களை அடிக்க வேண்டாம் எனவும் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. சிறிய பிரச்னைகளைக்கூட ஊதிப்பெருக்கி குளிர்காய நினைக்கும் பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மத்தியில் பெரிய பிரச்னையை அடக்கத்தோடு கையாண்டு வருவது பாராட்டத்தக்கது.
எதையும் ஜனநாயக ரீதியாக… சட்ட ரீதியாக கையாள்வதையே முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார்.
அதன்படி, இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய செயல் குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் புகார் மனு கொடுக்க உள்ளனர். தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.
அனைத்து ஆளுநர்களும் குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பட்டவர்களே. எல்லை மீறினால் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
தமிழ்நாட்டுக்கு நல்லதே நடக்கட்டும்!



