தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு சிறந்த சிறிய வங்கி என்ற விருதினை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார். தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி.
இந்த வங்கி சிறந்த சிறிய வங்கி என்ற விருது பெற்றிருக்கிறது. இந்த விருதானது, பிசினஸ் டுடே – கேபிஎம்ஜி ஆண்டு தோறும் நடத்தும் சர்வேயின் படி, ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் இந்த வங்கிக்கு வழங்கப் பட்டுள்ளது.
பிசினஸ் டுடே- கேபிஎம்ஜி கடந்த 27 ஆண்டுகளாக வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து சுமார் 37 தரக்கட்டுப்பாடு விதிகளின் அடிப்படையில் இந்த விருதுகளை வழங்கி வருகிறது.
மும்பையில், நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இந்த விருதினை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணனிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வழங்கினார்.
ரிசர்வ் வங்கி கவர்னர்
விழாவில் மத்திய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரட், பாரதிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி விருது பெற்ற வங்கிகளைப் பாராட்டினார்கள்.
விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் “Banking and Fintech: A New Partnership” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
விருது பற்றி அவர் கூறுகையில் “இந்த சிறப்பான தருணத்தில் இந்த விருதினை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் உரியதாக்குவதாக தெரிவித்தார். இந்த விருது பெற்ற மகிழ்ச்சியோடு, நாங்கள் இன்னும் இரட்டிப்பு முயற்சியோடு பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு இந்த விருதினைத் தொடர்ந்து பெற்றிட வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), வங்கி யானது ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது.
இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் 511 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.