கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தக்கலை ஒன்றியத்திற்கு உட்பட்ட முளகுமூடு பேரூராட்சி, திக்கணங்கோடு, முத்தலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்கள் பயணத்தின் போது, ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முளகுமூடு பேரூராட்சி பகுதியில் தொகுத்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.3.46 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவறுத்தப்பட்டது.
திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி இலவச வீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டின் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.11 லட்சம் மதிப்பில் திக்கணங்கோடு தினசரி சந்தை வளாகத்தில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி, மேற்கூரை அமைக்கும் பணி, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.14.75 லட்சம் மதிப்பில் தெங்கன்குழி பகுதியில் கிராமப்புற வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, முத்தலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் ஆயத்த ஆடை அலகு II கட்டுமானப் பணி, ரூ.14.34 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி கிராம சேவை மைய கட்டிடத்தின் முதல் தளத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு கட்டிட பணி, ரூ.17.60 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு I முடிவுற்ற கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி சி.எஸ்.ஐ. சர்ச் முதல் தக்கலை பேருந்து நிலையம் வரை மேம்படுத்தப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி பகுதியிலுள்ள ஜி.பி.நகரில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் சாலை பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
முத்தலக்குறிச்சி பகுதியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வாழை சிப்ஸ் உற்பத்தி பிரிவு கட்டிட பணி, முத்தலக்குறிச்சி பகுதியில் ரூ.23.30 லட்சம் மதிப்பில் வாழை மாவு உற்பத்தி பிரிவு கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.5.74 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்பயணத்தின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பாபு, செயற்பொறியாளர் ஏழிசை செல்வி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்தலைவர் அருள் ஆன்டனி, முத்தலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சிம்சன், உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ) ரெஜினால்டு, மரிய தேவிகா (சாலைகள் மற்றும் பாலங்கள்), உதவி பொறியாளர்கள் ஜெனி (ஊ.வ), ஆனிலெட் ஷீஜா (ஊ.வ), தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா ஆறுமுக நயினார் (வ.ஊ), அன்வு (கி.ஊ), அருளானந்த ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.