fbpx
Homeபிற செய்திகள்தேனி நாடாளுமன்ற தொகுதி காலியாகுமா?

தேனி நாடாளுமன்ற தொகுதி காலியாகுமா?

2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.

இதில், சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிமுக தேனியை தவிர தமிழ்நாட்டில் எங்குமே கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியின் வாக்காளர் மிலானி (திமுகவைச் சேர்ந்தவர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. “வேட்புமனுவில் சொத்துகளையும், வருமானங்களையும் ரவீந்திரநாத் வேண்டுமென்றே மறைத்திருக்கிறார். படிவம் 26-ல் இதை குறிப்பிடவில்லை.

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 89, 100 (1) (ஏ) உள்ளிட்ட உட்பிரிவுகளுக்கு எதிரானது. இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது தவறு. தன் வருமானம், சொத்து விவரம் ஆகியவற்றை மறைத்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கிறேன்” என நீதிபதி சுந்தர் தீர்ப்பு அளித்தார்.

வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேனி தொகுதி காலியாகுமா என்றால் அது உடனடியாக ஆகாது. அவர் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

30 நாட்களில் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், தேனி தொகுதி காலியாவதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்.

ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால், என்னவாகும் என்று பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். 1971ம் ஆண்டு ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் 1975 ஜூனில் தீர்ப்பு கூறியது.

இதற்கு எதிராக இந்திராகாந்தி உச்ச நீதிமன்றம் சென்றார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நிபந்தனைகளுடன் தடையை விதித்த உச்ச நீதிமன்றம், இந்திரா காந்தி பிரதமராக தொடரலாம் என்றும், அவரால் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது என்றும் தெரிவித்தது. அதற்கு மறு நாளே இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இதனை தொடர்ந்து இதுபோன்ற பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் சென்ற போது, ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அல்லது நிலுவையில் இருக்கிறது.
சமீபத்தில் கேரளாவில் கிறிஸ்தவர் என்பதை மறைத்து போட்டியிட்டதால் தேவிகுளம் எம்எல்ஏ ராஜாவின் வெற்றி செல்லாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, சில நிபந்தனைகளுடன் ஜூலை வரை இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது. மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுக்கும் வரை, அவர் எம்எல்ஏவாக தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

தீர்ப்பினை எதிர்த்து ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால், இந்திரா காந்தி வழக்கில் அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலும் வழங்குமா அல்லது தள்ளுபடி செய்யுமா? தேனி தொகுதியை காலி என தேர்தல் ஆணையம் அறிவிக்குமா?

இந்த கேள்விகளுக்கு விடை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே கிடைக்கும்!

படிக்க வேண்டும்

spot_img