தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்காட்சியை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டு, பள்ளிக்கல்விதுறையின் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட பேரணியை தொடங்கி வைத்தார்.
சென்னை மாகாணத்திற்கு பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரிட்டு அறிவித்த நாளான ஜூலை 18-ஐ தமிழ்நாடு நாள் என்று கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். அந்த வகையில் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சோதனையிலும் சாதனை, மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம், மக்கள் நலன் பேணும் மகத்தான அரசு, கல்வி மேம்பாடு-தந்தையுமான முதல்வர், இளைஞர் நலனே நாட்டின் வளம், சமூக –சமத்துவம் காக்கும் சாமானியர்களின் அரசு, உழவர் நலன் காக்கும் உங்களின் அரசு, தொழில் வளர்ச்சி- முதலிடம் நோக்கி முன்னேறும் தமிழ்நாடு, களத்தில் முதல்வர், எழில்மிகு நகரங்களும் வளமிகு வட்டாரங்களும், இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு ஏற்றம் பெற, உள்ளிட்ட தலைப்புகள் மற்றும் தமிழக முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அறிவித்த திட்டங்களின் புகைப்படங்கள், சென்னை மாகாண வரைபடம், தமிழ்நாட்டின் தற்போதைய வரைபடம் உள்ளிட்ட புகைப்படங்கள் கொண்டு அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியினை ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இப்புகைப்படக்கண்காட்சியானது வரும் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து.பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பள்ளி மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற தமிழ்நாடு நாள் பேரணியினை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே.ஜி மருத்துவமனை, பந்தயசாலை வழியாக சி.எஸ்.ஐ பள்ளியை சென்றடைந்தது. இப்பேரணியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்