fbpx
Homeபிற செய்திகள்அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்!

அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம்!

தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மேல் முறையீட்டு வழக்கை நேற்று (வியாழக்கிழமை) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, டாஸ்மாக் தொடர்பான வழக்கில், அதிகாரிக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை? தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் காட்டமாக தெரிவித்துள்ளார். இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.


அமலாக்கத்துறை அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கிறது. கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி செயல்பட்டிருக்கிறார்கள். எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று அமலாக்கத்துறை தலையில் ஓங்கிக் குட்டியிருக்கிறது.


அமலாக்கத்துறையிடம் “நீங்கள் மாநில உரிமைகளுக்கு எதிராக நடக்கிறீர்கள்” என்ற கருத்தை முதல் முறையாக உச்சநீதிமன்றம் முன் வைத்திருக்கிறது. அரசியல் ரீதியாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.


அதைத்தான் தமிழ்நாடு அரசும் ஆளும்கட்சியான திமுகவும் குற்றம்சாட்டியபடி இருந்தன. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு தடை விதித்துள்ளது.
இனி டாஸ்மாக் அலுவலகங்களில் ரெய்டுகளை நடத்த முடியாது. ஏற்கனவே அமலாக்கத்துறைக்கு கடிவாளத்தைப் போட்டு தடுத்து நிறுத்தி உள்ளது உச்சநீதிமன்றம்!

படிக்க வேண்டும்

spot_img