13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான தமிழ்நாடு சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில், மதுரை வீராங்கனைகள் ஏ.நயோனிகா, எஸ்.கே.யாசினி ஆகியோர் சாம்பியன் பட்டங்களைப் பெற்றனர்.
13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான பாட்மிண்டன் போட்டிகள், தமிழ்நாடு பாட்மிண்டன் அசோசியேசன் கீழ் உள்ள விருதுநகர் மாவட்ட ஷட்டில் அசோசியேசன் சார்பில், விருதுநகர் திருத்தங்கலில் நடந்தன.
மாவட்டம் முழுவதிலிருந்து 679 பேர் பங்கேற்றனர். சிவகாசி எம்.எல்.ஏ. ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் இப்போட்டிகள் துவங்கின. ஒற்றையர், இரட்டையர் பிரிவில், ஆண்கள் மற்றும் மகளிருக்கு தனித்தனியே போட்டிகள் நடந்தன.
ஹட்சன் பாட்மிண்டன் மையத்தின் முதன்மை வழிகாட்டி அஜித் ஹரிதாஸ் பேசுகையில், இந்தப் போட்டியில் எண்ணற்ற வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை அறிய முடிந்தது.
ஒவ்வொரிடமும் தனித்திறன் ஒளிந்துள்ளது. அனைவரும் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வெல்ல வேண்டும். அவர்களுக்கு என் வாழ்த்துகள் என்றார்.
ஹட்சன் அக்ரோ புராடெக்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆர்.ஜி.சந்திரமோகன் பேசுகையில், குழந்தைகளை இந்த மாதிரியான போட்டிகளில் பங்கேற்க ஆர்வத்தைத் தூண்டிய பெற்றோர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்.
இவர்கள் இந்தியாவுக்காக பங்கேற்று பல பரிசுகளை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஹட்சன் பாட்மிண்டன் அகாடமி விளையாட்டுத் துறை வீரர்களை ஊக்குவிக்க தொடர்ந்து தனது பயிற்சியை அளிக்கும் என்றார்.



