மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ரூட்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவரும், சச்சிதானந்த பவுண்டேஷனின் அறங்காவலருமான ஆர். வருண் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் கவிஞர் கவிதாசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ரா. உமாமகேஸ்வரி வரவேற்றார்.
மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி முதல்வர் ஏ.பாலசுப்பிரமணியம், முன்னாள் மாணவி டாக்டர் சி.சௌனிவாஷினி, முன்னாள் மாணவர் பிரபு கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
விழாவில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சுந்தரவடி வேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:
சமூக வலைதளங்களில் வரும் பல்வேறு விஷயங்களில் தங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய பக்குவம் குழந்தைகளுக்கு இல்லை.
இதை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். குழந்தைகளுக்கு எந்த தேவைக்குப் பணம் தர வேண்டுமோ அதற்கு மட்டும்தான் பணம் தர வேண்டும். பள்ளிப் பருவத்தில் தங்கள் கையில் பணம் புழங்குவதால் சில குழந்தைகள் தவறான பாதைக்குச் சென்றுவிடுகின்றனர். எனவே, குழந்தைகளுக்குப் பணம் வழங்குவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியின் டீன் டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியம், தனது உரையில் “பள்ளி கல்லூரி காலங்களில் ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றுடன் விளையாட்டிலும் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். என்று கூறினார்.
விழாவில், 2024-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் சின்னம், இந்திய வரை படம்போல மாணவர்கள் நின்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துணை இயக்குநர் டி.பி. அனிதா செய்திருந்தார். துணை முதல்வர் சு.சக்திவேலு நன்றி கூறினார்.