டெல்லியில் சாலைகள், வீதிகளில் மனிதர்களை குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோரை தெருநாய்கள் தாக்கும் சம்பவங்களாலும் அதனைத் தொடர்ந்து ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதாலும் தெருநாய்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
டெல்லியில் தெருநாய்களை இடமாற்றம் செய்வதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் விலங்கு உரிமை ஆர்வலர்கள் தடை உத்தரவைப் பெற்ற பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“நாய்கள் இல்லாத பகுதியை உறுதி செய்வதற்கு நாம் எந்த வழியையாவது கண்டுபிடிக்க வேண்டும், அப்போதுதான் குழந்தைகளும் முதியவர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள்,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
விலங்கு ஆர்வலர்கள் என்று அழைக்கப்படுபவர்களெல்லாம், தங்கள் இன்னுயிரை இழக்கும் குழந்தைகளை மீண்டும் கொண்டு வர முடியுமா?” என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். இது டெல்லியில் சாத்தியமல்ல என்ற எதிர் வாதமும் எழுந்துள்ளது.
டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தெரு நாய்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் குறிப்பாக நகரப்பகுதிகளில் தெருவிற்கு ஓரிரு நாய்கள் இருந்த நிலை மாறி, தற்போது பத்து, பதினைந்தாக உயர்ந்து விட்டது. எந்த நாய் கடிக்கும் என்பதை யாரறிவார்? சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களையும் தெருநாய்கள் துரத்தித் துரத்தி கடித்து விடுகின்றன. சிறார்களை தனியாக அருகில் உள்ள கடைகளுக்கு அனுப்பக்கூட பெற்றோர் அஞ்சுகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் எதிரொலித்துள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் தெரு நாய்களை சரியாக கட்டுப்படுத்தவில்லை. இதனால், தினமும் நிறைய சிறுவர்கள், முதியவர்கள் தெரு நாய்களால் காயம் அடைகிறார்கள். எனவே, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பொது சாலைகளில் திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும்“ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தெரு நாய்கள் கடிப்பதால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் திரியும் தெரு நாய்களால் குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன” என்று கூறியதோடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் சுட்டிக்காட்டினர்.
அதாவது, தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்துகளை தடுக்க அரசு உடனடியாக செயல்பட வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் தெரு நாய்களால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவின்படி தமிழ்நாடு அரசு உடனடியாக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகளால் தெருநாய்களின் தொல்லை குறையும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். சிறுவர்கள், முதியவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
அரசுக்கு இது பெரும் சவாலான ஒரு காரியம் தான். ஆனாலும் மனித உயிர் மிகமிக முக்கியமானதல்லவா?!



