நீலகிரி மாவட்டத்தில் கேரளா கர்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ள சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா கேரளா மாநிலங்களை சேர்ந்த குறைந்தபட்சம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஆய்வு
இந்த ஆண்டு எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சேலூர் பேரூராட்சியின் சார்பாக தார் சாலை, கழிவறை பராமரிப்பு, குடிநீர் தொட்டிகள் அமைத்தல், மண் சாலையை பராமரித்தல் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல், 20க்கும் மேற்பட்ட கழிவறைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹீம்ஷா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் கௌரி கோட்டாட்சியர் துரைசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஷத், துணைத் தலைவர் பிரேம்குமார், வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த பராமரிப்பு பணியினை வனத்துறை, மின்சார துறை, காவல் துறை, வருவாய் துறை, திருக்கோயில் நிர்வாக குழு ஆகிய துறைகளின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது.
இந்தத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.