fbpx
Homeதலையங்கம்சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக்கட்டை நீங்குமா?

சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக்கட்டை நீங்குமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்ற நிலையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்தனர்.

இந்தக் கால்வாய்த் திட்டம் முடிவுற்று, திறக்கப்பட்டு இருக்குமேயானால், தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் வேலை கிட்டாமல் அலைகின்ற இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். மிகப்பெரிய அளவிற்கு தென்மாவட்டங்கள் பயன்பெற்று இருக்கும்.

ஆனால் சிலரது சூழ்ச்சி காரணமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் அப்போது முடக்கப்பட்டது. கலைஞரின் சீரிய முயற்சியினால், ஒன்றிய அரசினால் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

மதுரையில்தான் அத்திட்டத்தினுடைய தொடக்க விழாவினை நடத்தினார்கள். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்டது. ஆனால் ‘’ராமர் பாலம் அங்கே இருக்கிறது; அதை இடிக்கக் கூடாது’’ என்று சொல்லி அந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

அதற்குப் பிறகுகூட, அந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்காக குறிப்பிட்ட இடத்தை மட்டும் விட்டு விட்டு, அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று முதலமைச்சராக இருந்த கலைஞர் போன்றவர்கள் சொல்லியும்கூட செவிடன் காதில் ஊதிய சங்காக கிடப்பில் போடப்பட்டது,

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று, இன்றைக்கு ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய நிதின்கட்காரி உறுதிமொழி கொடுத்தும்கூட, இன்றுவரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, அத்துறை சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “ராமர் பாலம் அங்கே இருந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது’’ என்று தெளிவாகவே சொல்லிவிட்டார்.

எனவே, ராமர் பாலம் என்ற பெயரில், இவ்வளவு பெரிய திட்டத்தைப் புறக்கணித்தது என்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக – தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடாது என்பதற்காக முடக்கப்பட்ட திட்டம் அது.

தமிழ்நாட்டில் உள்ள அத்துணைத் தோழமைக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்திடவேண்டும் என திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது சிறந்த திட்டம் என்பதில் சந்தேகமில்லை. இதிலாவது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற பாகுபாடு பார்க்காமல் ஒன்றிய அரசை வலியுறுத்த அனைத்துத் தலைவர்களும் முன்வர வேண்டும்.

தமிழக பாஜகவும் இதில் கவனம் செலுத்த வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img