அன்பு நண்பர்களே!
பல தளங்களிலிருந்து பல கருத்துக்களை எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.ஒரு மாறுதலுக்காக கொஞ்ச நாளைக்கு நமது இலக்கியங்களை தன்னம்பிக்கை குறித்து என்ன பேசுகின்றன என்பது குறித்து சிந்திக்கலாமா?
தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சங்கப்பாடல்கள் முதல் சமீபத்திய நூல்கள் வரை. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களும் எண்ணற்றவை.
கம்பனின் கவிநயம். வள்ளுவனின் நெறியாண்மை. வள்ளலாரின் கருணை வழிந்தோடும் பாடல்கள், சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வீரம், காதல்… என்று தமிழில் எதைவிடுவது, எதைச் சொல்வது?
கவிநயமிக்க சொல்லாட்சியும் பொருள் நயமிக்க பாடல்களும் விரவிக் கிடப்பதையும் நாம் காணலாம்.
தற்காலத்தில் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என்ற சொற்கள் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மேற்சொன்ன இரு சொற்களை ஏதோ தற்கால உருவாக்கம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவை பற்றிய கருத்துக்களும் நம் தமிழ் இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
தமிழின் பெருமைக்கு மகுடமாக விளங்கும் நூல் திருக்குறள். திருக்குறளில் வாழ்வியல் கருத்துக்கள் கொள்ளை கொள்ளையாகக் குவிந்து கிடக்கின்றன.
இல்வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? பொருளாதார வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்? காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார் வள்ளுவர்.
திருக்குறள் முழுவதிலுமே தன்னம்பிக்கைக் கருத்துக்கள் அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றைத் தேடி ஒரு பயணம் போகலாமா?
ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் முழுமையாக ஆராய வேண்டுமென்றால், மூன்று கோணங்களில் ஆராய வேண்டும். மூன்று கோணங்கள் என்றால் மனிதன் என்ற முழுமையின் மூன்று உட்பகுதிகள் என்றும் கொள்ளலாம்.
ஒவ்வொரு மனிதனையும் முழுமையாக உருவாக்குவது அவனது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று நிலைகள் தான்.
எண்ணம்
ஒரு மனிதனை உருவாக்குவது, வடிவமைப்பது அவனது எண்ணமே. உடல் பலமே இல்லாத ஒருவர், மிக மெல்லிய உடல்வாகு கொண்ட மனிதர்! ஆனால் அவரது ஆன்ம பலத்தால் இந்த தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தையே வடிவமைத்தார் என்பதை நாம் அறிவோமே!
அவர் தான் மகாத்மா காந்தியடிகள். ‘ இன்ஸ்பையரிங் இளங்கோவன்’ என்று ஒரு இளைஞருடைய பேட்டியை காண நேர்ந்தது. வள்ளுவர் இவருக்கே வடிவமைத்த மாதிரி
ஒரு குறள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
ஆம். வெறும் எண்ணம் மட்டும் போதாது. ‘நான் நினைச்சேன்னா நொடியில முடிச்சுடுவேன், தெரியுமா?’ என்று சொல்லிக் கொண்டே இருப்பதால் என்ன பயன்? அந்த நொடி எப்போது வருவது? எப்போது முடிப்பது?
எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தால் அது நிறைவேறுவதற்கான வழிமுறைகள் கண்டறியப்படும். சரி, அப்படி எண்ணத்திலே திண்ணியராக இருந்தால் எவ்வளவு தூரம் போகலாம்? எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.
ஒரு குளத்தில் தாமரை மலரும்போது அது நீர்மட்டத்துக்கு மேலேதான் இருக்கும். நீர்மட்டம் உயர உயர தண்டின் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கும். அதுபோல உள்ளத்தின் உயர்வைப் பொறுத்து வெற்றியின் உயரமும் அமையும்.
இதைத் தான் வள்ளுவர்….
‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு’
எண்ணம் எப்போதும் உயர்வானதாகவே இருக்க வேண்டும். சிலவகையான எண்ணங்கள் பாதைகளை அடைத்துவிடும்.
‘இன்ஸ்பையரிங் இளங்கோவன்’ என்ற அந்த இளைஞருடைய பேட்டியை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. இரண்டு கண்களும் இல்லாத இளைஞர். ஆனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை வளர்த்துக் கொண்டு மோட்டிவேஷனல் டாக்ஸ் அதாவது மனநல மேம்பாட்டுக்கு ஏற்றவகையில் உரையாற்றுபவராக உருவாகி உள்ளார்.
‘ஆகா… நமக்கு இப்படி ஆகிவிட்டதே…’ என்று எண்ணாமல் வேறுவழியாகத் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டார். இதைத் தான் வள்ளுவர், ‘
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’.
‘எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கவே கூடாது. நேர்மையான எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுக்க வேண்டும்‘ என்கிறார்.
இன்னொரு இடத்தில், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்றார். நினைப்பதும் உயர்வானதாக இருக்க வேண்டும் என்றால் எண்ணம் மட்டும் சிறந்தால் போதுமா? எல்லாம் நடந்து விடுமா? தீவிரமான எண்ணம் ஆழ்மனதில் பதிந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்ற எண்ணத்தை முதலில் சொன்னார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.
அதை உளவியலாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். எனவே எண்ணமே சொல்லாக உருவாகிறது.
சொல்
எண்ணங்கள் தான் சொல்லாக வடிவெடுக்கின்றன. ஒரு செயலை முன்னெடுத்துச் செல்லும் முன்பு, ஒரு திட்டமாக வடிவப்படுத்துதல் வேண்டும்.
உதாரணமாக, ஒரு தொழில் தொடங்க விரும்புகிறோம். அதற்காக ஒரு வங்கியின் உதவியை நாடுகிறோம் என்றால் அங்கே ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்பார்கள். அப்போது நம் திட்டத்தை விளக்குவது அதுவும் திறம்பட விளக்குவது மிகவும் அவசியம்.
வங்கி அதிகாரிகள் கேள்வி கேட்கும்போது உளறிக்கொட்டி கிளறி மூடினால்…. ‘ஓகோ! இவரிடம் தெளிவு இல்லை. இவருடைய திட்டமும் அதுபோலத் தான் இருக்கும்‘ என்ற அதிருப்தியான மனநிலையைத் தான் அடைவார்கள்.
அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்.
‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல், அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து’.
நாம் சொல்கிற சொல், வெல்லும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். அவர்களால் மறுக்கவே முடியாததாக இருக்க வேண்டும்.
இது வங்கிக் கடனுக்கு மட்டுமல்ல. வாழ்க்கையில் பிற சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். இதற்காக வளவளவென்று விளக்கிக் கொண்டே இருக்கக்கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டிய இடத்தில் சுருக்கமாக உரைக்க வேண்டும்.
விளக்கமாகச் சொல்லவேண்டிய இடத்தில் விளக்கமாக சொல்ல வேண்டும்.
திட்டங்களை காப்ஸ்யூல் என்பார்களே அதுபோல மாத்திரை வடிவில் தருவதற்கும் தெரிய வேண்டும். ப்ராஜக்ட் என்பது போல ஒரு திட்ட வடிவாகவும் கொடுக்கத் தெரிய வேண்டும்.
அப்படிப்பட்டவர்களைத் தான் ‘சொலல் வல்லன்’ என்கிறார்கள். சொலல் வல்லன் சோர்விலான், அஞ்சான். அவனை இகழ்வல்லல் யாருக்கும் அரிது.
இது அடுத்த கட்டத்திற்குப் போகிறது.
செயல்
சொல்லத் தெரிந்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். செயலில் இறங்க மாட்டார்கள். ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்றானே பாரதி. அதுமட்டுமல்ல செய்கிற மற்றவர்களையும் பார்த்து, ‘இவன் என்னத்தை செய்தான்? நான் மட்டும் இறங்கி இருந்தேன்னா நடந்திருக்கிறதே வேற. நம்ம லெவலே வேற’ என்று வாய்ப்பந்தல் போடுவார்கள்.
ஒரு திட்டத்தை எண்ணம், சொல் என்ற நிலை தாண்டி செயல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மனத்திட்பம் வேண்டும். சோர்வற்ற தன்மை வேண்டும்.
இதைத் தான் முந்தைய குறளிலே வள¢ளுவர் சொன்னார்.
இன்னும் சொல்கிறார்.
‘வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்;
மற்றைய எல்லாம் பிற’
இது ஒரு வட்டம் போல இருக்கிறது அல்லவா? இங்கே வினைத் திட்பம் என்று சொல்லும்போது மனத்திட்பம் வந்து விடுகிறது அல்லவா?
எனவே, செயலில் இறங்குவதற்கு மனத்திட்பம் வேண்டும். எதை எதைத் தள்ளிப்போடலாமோ அதைஅதை தள்ளிப்போடலாம். எதைஎதை உடனடியாக செய்ய வேண்டுமோ அதைஅதை உடனடியாகச் செய்ய வேண்டும்.
பத்து பேருக்கு விருந்தளிக்கு ம்போது இன்று வேண்டாம் நாளை என்று முடிவு செய்யலாம். ஆனால் பற்றியெரிகிற வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கக்கூடாது.
இதைத் தான்
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
என்றார்.
செயலில் இறங்கும்போதே நன்றாக ஆலோசித்து இறங்க வேண்டும். இதனை
‘எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு’
‘ஆரம்பிச்சுட்டு அப்புறம் பாத்துக்கலாம்!’ என்று நினைக்கவே கூடாது. வழியில் தடங்கல் ஏற்படும்போது, ‘அடடா… இதை நான் எதிர்பார்க்க வில்லையே. நான் என்னமோ நினைச்சுட்டு ஆரம்பிச்சுட்டேன். இது இப்படியாகும்னு நான் என்னத்தைக் கண்டேன்’ என்று நொண்டிச் சமாதானங்கள் சொல்லிக் கொள்ளக்கூடாது.
செயலுக்கான பொருள், செய்வதற்குத் தேவையான கருவி, காலம் எந்தவிதமான செயல் செய்வதற்கு வேண்டிய இடம்… இவற்றையெல்லாம் தீர்மானித்துக் கொண்டு இறங்க வேண்டும்.
‘பொருள், கருவி, காலம், வினை, இடமோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்’
என்றார் வள்ளுவர்.
பொருளியல் முழுக்க இந்த நான்கு வரிகளில் கொண்டு வந்து விடுகிறார் வள்ளுவர்.
எனவே தன்னம்பிக்கை கருத்துக்களையும் வழிகாட்டும் கருத்துக்களையும் திருக்குறளிலே நிறையத் தெளித்திருக்கிறார் வள்ளுவர்.
நமக்குத் தேவையானது எதுவோ அந்தக் கருத்தை அந்த பொக்கிஷப் பெட்டியிலே இருந்து எடுத்து திறமையாக கையாள்வது நம் கையில் தான் இருக்கிறது! அதுவும் நம் வெற்றிக்கு வழி வகுக்கும்!