fbpx
Homeபிற செய்திகள்பர்வதமலையில் பக்தர்கள் பாதுகாப்பு: ஆன்லைன் அனுமதி முறைக்கு நடவடிக்கை

பர்வதமலையில் பக்தர்கள் பாதுகாப்பு: ஆன்லைன் அனுமதி முறைக்கு நடவடிக்கை

பர்வதமலையில் பக்தர்களின் பாது காப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், பர்வதமலைக்கு தினமும் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 18 முதல் 60 வயது வரையிலானவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறு, இதய நோய், உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது நாளொன்றுக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பவுர்ணமி மற்றும் முக்கிய தினங்களில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வெளிமாவட்ட பக்தர்கள் இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெறும் வசதியை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


மேலும், மலை அடிவாரத்தில் நிரந்தர மருத்துவக் குழு அமைத்தல், முக்கிய நாட்களில் கூடுதல் குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மலைப்பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img